‘ஊழலை அகற்றுங்கள்’ – இடைக்கால பிரதமர் சுசீலா கார்கியிடம் நேபாள மக்களின் கோரிக்கை
நேபாளத்தில் இளைஞர்கள் நடத்திய பெரும் எழுச்சிப் போராட்டத்தால் ஆட்சியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அரசியல் ரீதியாக குழப்பமான சூழலில், இடைக்கால பிரதமராக சுசீலா கார்கி பொறுப்பேற்றுள்ளார். இந்த நிலையில், புதிய தலைமையின்கீழ் ஊழலை ஒழிக்க வேண்டும் என நேபாள மக்கள் வலியுறுத்துகின்றனர்.
உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியான சுசீலா கார்கியை, ‘ஜென் ஸீ’ தலைமுறை இளைஞர்கள் ஒருமனதாக ஆதரித்து பிரதமர் பதவிக்கு முன்மொழிந்தனர். அதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை சுசீலா கார்கி நேபாளத்தின் முதல் பெண் பிரதமராக பொறுப்பேற்றார். அவருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.
மூன்று நாட்கள் நீண்ட போராட்டத்தில் 51 பேர் உயிரிழந்ததோடு, பலர் காயமடைந்தனர். தற்போது நிலைமை மெல்ல சீராகி வருகிறது. இந்நிலையில் ஊழலை முற்றிலும் தடுக்க வேண்டும் என்பதே மக்களின் முக்கிய கோரிக்கையாக இருக்கிறது. அங்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது.
“நேபாளத்தில் புதிய காலத்தின் துவக்கத்தை பிரதமர் சுசீலா கார்கி ஏற்படுத்துவார் என்று நம்புகிறேன். தேசத்தை பாதுகாத்து முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லுவார்” என்று காத்மாண்டுவைச் சேர்ந்த சுமன் தெரிவித்தார்.
“நாட்டில் சிறந்த நிர்வாகம் தேவை. அதற்காக துறைசார்ந்த வல்லுநர்களை அமைச்சரவையில் நியமிக்க வேண்டும். அவர்கள் வழக்கறிஞர், ஆசிரியர், நீதிபதி யாராக இருந்தாலும் பரவாயில்லை. அது தேச வளர்ச்சிக்கு துணைபுரியும். ஊழலை வேரோடு ஒழிக்க வேண்டும்” என ராம் குமார் சிம்கதா கூறினார்.
“பிரதமர் சுசீலா கார்கி ஆட்சியிலிருந்து எங்கள் எதிர்பார்ப்பு ஒன்றுதான் – அரசியலமைப்பில் திருத்தம் செய்து ஊழலை தடுக்கும் வலுவான சட்டம் கொண்டு வர வேண்டும். அதனால் ஊழல் செய்தவர்கள் தண்டிக்கப்படுவர்” என லீலா தெரிவித்தார்.
‘ஜென் ஸீ’ இளைஞர்களின் போராட்டத்தின் விளைவாக, 73 வயதான கே.பி.சர்மா ஒலி தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசு கவிழ்ந்தது. அதன் பின்னர், இளைஞர்களின் ஆதரவோடு சுசீலா கார்கி இடைக்கால பிரதமராக பொறுப்பேற்றுள்ளார்.