உங்கள் நாட்டில்தான் பின்லேடன் ஒழிக்கப்பட்டார்” – ஐ.நா. பாதுகாப்பு சபையில் பாகிஸ்தானை கடுமையாக சாடிய இஸ்ரேல்

அல்-காய்தா தலைவன் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் மறைந்து இருந்தபோது அமெரிக்கா அவரை கொன்றது – அந்த உண்மையை பாகிஸ்தான் மாற்ற முடியாது என்று, ஐ.நா. பாதுகாப்பு சபை கூட்டத்தில் இஸ்ரேல் சுட்டிக்காட்டியது.

காசாவில் நடக்கும் ராணுவ நடவடிக்கைகள், சிரியா, லெபனான், ஈரான், ஏமனில் எல்லைத் தாண்டிய தாக்குதல்கள் ஆகியவற்றின் மூலம் இஸ்ரேல் சர்வதேச சட்டத்தை மீறுகிறது என்று, 9/11 பயங்கரவாதத் தாக்குதலின் 24ஆம் ஆண்டு நினைவு நாளில் நடந்த பாதுகாப்பு சபை கூட்டத்தில் பாகிஸ்தான் தூதர் அசிம் இப்திகார் அகமது குற்றம்சாட்டினார்.

இதற்கு பதிலளித்த இஸ்ரேல் நிரந்தர பிரதிநிதி டேனி டானன்,

“இப்போது கேட்க வேண்டிய கேள்வி ‘பயங்கரவாதியை ஏன் வெளிநாட்டில் தாக்க வேண்டும்’ என்பதல்ல. ‘ஒரு பயங்கரவாதிக்கு ஏன் தங்குமிடம் கொடுக்கப்பட்டது?’ என்பதுதான். பின்லேடன் மற்றும் ஹமாஸ் இடையே வேறுபாடு இல்லை.

இஸ்ரேலுக்கு அக்டோபர் 7ம் தேதி நடந்த தாக்குதல் போலவே, 9/11 நாளும் நெருப்பு, ரத்தத்தின் நினைவு நாள். அந்த தாக்குதலுக்குப் பிறகு, எந்த நாடும் பயங்கரவாதிகளைத் தங்க வைக்கவோ, நிதியளிக்கவோ கூடாது என்ற தீர்மானத்தை பாதுகாப்பு சபை நிறைவேற்றியது. அந்தக் கொள்கை இன்றும் அமலில் இருக்க வேண்டும்,” என்றார்.

அதற்கு பாகிஸ்தான் தூதர் அஹ்மத்,

“நீங்கள் ஒரு ஆக்கிரமிப்பாளர். ஐ.நா. விதிமுறைகளையும், சர்வதேச சட்டத்தையும் தொடர்ந்து மீறுபவர். இஸ்ரேல் இந்த அவையின் புனிதத்தை அவமதிக்கிறது. பிறரை குற்றம் சாட்டி, தன் சட்டவிரோத செயல்களை மறைக்கும் உத்தியைப் பயன்படுத்துகிறது. இது புதிய விஷயம் அல்ல,” என்று பதிலளித்தார்.

மீண்டும் டானன் பதிலளித்தபோது,

“ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில்தான் கொல்லப்பட்டார். அதற்காக அமெரிக்காவை யாரும் குற்றம் சாட்டவில்லை. இந்த சபையில் உள்ள பிற நாடுகள் பயங்கரவாதிகளைத் தாக்கும்போது யாரும் கண்டிப்பதில்லை. ஆனால் இஸ்ரேலை மட்டும் வேறு விதமாக மதிப்பீடு செய்கிறீர்கள். இதுதான் இரட்டை நிலைப்பாடு.

9/11 சம்பவத்தின் உண்மையை யாராலும் மாற்ற முடியாது. பின்லேடன் பாகிஸ்தானில்தான் பதுங்கியிருந்தார், அவர் உங்கள் நாட்டில்தான் ஒழிக்கப்பட்டார் என்ற உண்மையை மறைக்க முடியாது. எங்களை விமர்சிக்கும் போது, இந்த கேள்வியை உங்களிடம் முன்வைப்பேன்,” எனக் கூறினார்.

Facebook Comments Box