நடிகை ஹன்சிகாவின் மனு நிராகரிப்பு – மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு
தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட குடும்ப வன்முறை வழக்கை ரத்து செய்ய கோரி நடிகை ஹன்சிகா தாக்கல் செய்த மனுவை, மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ஹன்சிகா, தொழிலதிபர் சோஹைல் கத்தூரியாவை 2022ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகு, ஹன்சிகாவின் சகோதரர் பிரசாந்த் மோத்வானி மற்றும் அவரது மனைவி முஸ்கான் நான்சி ஜேம்ஸ் இடையே முரண்பாடு எழுந்தது. இதனால் பிரசாந்த், விவாகரத்து மனுவை தாக்கல் செய்தார்.
பின்னர், 2024ஆம் ஆண்டு முஸ்கான், தனது கணவர் பிரசாந்த், ஹன்சிகா, அவர் தாயார் மோனா ஆகியோர் மீது மும்பை அம்பாலி போலீஸில் புகார் அளித்தார். தன்னை சித்திரவதை செய்ததாகவும், பணமும் விலையுயர்ந்த பரிசுகளும் கேட்டு தொந்தரவு செய்ததாகவும் குற்றஞ்சாட்டினார். மேலும், கணவருடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்தபோதும், ஹன்சிகா மற்றும் அவரது தாய் தடையாக இருந்ததாகவும் கூறினார்.
இந்த புகாரின் பேரில் ஹன்சிகா உள்ளிட்டோர்மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர், அவர்கள் ஜாமீன் பெற்று வெளிவந்தனர்.
இதையடுத்து, வழக்கை ரத்து செய்ய கோரி ஹன்சிகா தாக்கல் செய்த மனுவை, உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. விசாரணை தொடர வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இதனால், ஹன்சிகா மீதான போலீஸ் விசாரணை தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது.