“நேபாளத்தில் அமைதி, நிலைத்தன்மைக்கு சுசீலா கார்கி பங்களிப்பார்” – பிரதமர் மோடி நம்பிக்கை
நேபாளத்தின் இடைக்கால பிரதமராக தேர்வான சுசீலா கார்கி, அந்நாட்டின் அமைதி, ஸ்திரத்தன்மை, வளம் ஆகியவற்றுக்கு வழி வகுப்பார் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நேபாள இளைஞர்கள் சாலைகளை சுத்தப்படுத்தி வண்ணம் தீட்டும் பணியில் ஈடுபட்டதற்கும் அவர் பாராட்டுத் தெரிவித்தார்.
மணிப்பூரின் தலைநகர் இம்பாலில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, சுசீலா கார்கிக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் தெரிவித்தார். அவர் கூறியதாவது:
“நேபாளம், இந்தியாவின் மிக நெருக்கமான அண்டை நாடு. அதன் இடைக்கால பிரதமராக பொறுப்பேற்றுள்ள சுசீலா கார்கிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
நேபாளத்தில் அமைதி, நிலைத்தன்மை மற்றும் முன்னேற்றம் உருவாக சுசீலா முக்கிய பங்காற்றுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. மேலும், நேபாளத்தின் முதல் பெண் பிரதமராக அவர் பதவியேற்றிருப்பது பெண்களுக்கு அதிகாரமளிக்கும் நல்ல முன்னுதாரணமாகும். நிலையற்ற சூழ்நிலையில் கூட ஜனநாயக மதிப்புகளை நிலைநிறுத்தி வரும் நேபாள மக்களுக்கு எனது பாராட்டுகள்.
சமீபத்தில் நேபாள இளைஞர்கள் சாலைகளை சுத்தம் செய்து, வண்ணம் தீட்டி சேவை செய்ததை சமூக ஊடகங்களில் கண்டேன். இது ஒரு சிறந்த முயற்சி. அவர்களின் சிந்தனை மற்றும் செயல் இரண்டும் ஊக்கமளிக்கக்கூடியவை. இது நேபாளத்தின் புதிய எழுச்சியின் தெளிவான சின்னம். நேபாளத்தின் வளமான எதிர்காலத்துக்கான என் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.”
இதற்கு முன் இன்று காலை வெளியிட்ட எக்ஸ் (X) பதிவில், “நேபாள இடைக்கால அரசின் பிரதமராக பொறுப்பேற்றுள்ள சுசீலா கார்கிக்கு வாழ்த்துகள். நேபாள மக்களின் அமைதி, முன்னேற்றம் மற்றும் செழிப்புக்காக இந்தியா எப்போதும் துணையாக இருக்கும்” என பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார்.