உக்ரைன் போருக்கு முடிவு காண சீனாவுக்கு கடும் வரி விதிக்க வேண்டும் – ட்ரம்ப் நேட்டோவுக்கு வலியுறுத்தல்
உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்த, சீனாவின் பொருளாதார செல்வாக்கை குறைக்கும் நோக்கில், சீனாவுக்கு 50% முதல் 100% வரை வரிகள் விதிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேட்டோ நாடுகளை கேட்டுக்கொண்டார்.
சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
“போரில் வெற்றிபெறுவதற்கான நேட்டோவின் அர்ப்பணிப்பு மிகக் குறைவாக உள்ளது. சில நேட்டோ நாடுகள் இன்னும் ரஷ்ய எண்ணெயை வாங்கிக் கொண்டிருப்பது அதிர்ச்சிகரமானது. இது, உக்ரைன்-ரஷ்யா போரின் பேச்சுவார்த்தை நிலைப்பாட்டையும், பேரம் பேசும் திறனையும் பெரிதும் பாதிக்கிறது.
ரஷ்ய எண்ணெய் இறக்குமதியைத் தடைசெய்து, சீனாவுக்கு அதிக வரி விதிப்பதே இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு செல்லும் முக்கியமான வழி. சீனா மீது 50% முதல் 100% வரை கடுமையான வரிகளை விதிக்க நேட்டோ நாடுகள் ஒத்துழைக்க வேண்டும்.
ரஷ்யாவுக்கு சீனா வலுவான பொருளாதார ஆதரவாக உள்ளது. ஆகவே, சீனாவுக்கு விதிக்கப்படும் கூடுதல் வரிகள், அந்த ஆதரவைக் குறைக்கும். நேட்டோ நாடுகள் அனைத்தும் இதற்கு ஒப்புக்கொண்டு, ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால், ரஷ்யா மீது பெரிய பொருளாதார தடைகளை விதிக்க நான் தயாராக இருக்கிறேன்,” என்றார் ட்ரம்ப்.
சீனா மற்றும் இந்தியாவுக்கு அடுத்தபடியாக, நேட்டோ உறுப்பு நாடான துருக்கி, ரஷ்ய எண்ணெயை அதிகம் இறக்குமதி செய்கிறது. அதுபோல், ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியாவும் ரஷ்யாவிலிருந்து குறிப்பிடத்தக்க அளவில் எண்ணெய் வாங்குகின்றன.