மியான்மரில் 2 பள்ளிகள் மீது தாக்குதல்: 19 மாணவர்கள் பலி; ராணுவமே காரணம் என கிளர்ச்சியாளர்கள் குற்றச்சாட்டு

மியான்மரில் 2021-ல் ஆங் சான் சூகியின் அரசு கவிழ்க்கப்பட்டதையடுத்து, நாடு ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ஆனால், ராணுவத்துக்கு எதிராக பல ஆயுதக் குழுக்கள் மற்றும் எதிர்ப்பு படைகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு ரக்கைன் மாகாணத்தில் உள்ள இரண்டு பள்ளிகள் மீது 500 பவுண்ட் எடையுள்ள குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக அராகன் ஆர்மி கிளர்ச்சியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த வான்வழித் தாக்குதலில், விடுதிகளில் தங்கியிருந்த மாணவர்கள் 19 பேர் தூக்கத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 22 மாணவர்கள் காயமடைந்தனர். உயிரிழந்தவர்கள் 15 முதல் 21 வயதுக்குட்பட்டவர்கள் என கூறப்பட்டுள்ளது. இதற்கான முழுப் பொறுப்பு ராணுவத்துக்கே உண்டு என கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து மியான்மர் ராணுவம் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. எனினும், மியான்மர் நவ் செய்தி நிறுவனம், பள்ளிகள் மீது 500 பவுண்ட் குண்டுகள் வீசப்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த கொடூரத் தாக்குதலை ஐ.நா.வின் குழந்தைகள் நல அமைப்பு யுனிசெப் கடுமையாக கண்டித்துள்ளது.

Facebook Comments Box