நவக்கிரக தோஷங்களை நீக்கும் சேலம் சுகவனேஸ்வரர் | ஞாயிறு தரிசனம்
தல வரலாறு
சுவர்ணாம்பிகை சமேத சுகவனேஸ்வரர் திருத்தலத்தின் வரலாறு:
பிரம்மன் தனது படைப்பில் ஒவ்வொன்றும் எவ்வாறு வித்தியாசமாக உள்ளது என்பதை சொல்லிக் கொண்டிருந்தபோது, சுக முனிவர் அந்த ரகசியத்தை அறிய சரஸ்வதியிடம் சென்றார். இதனால் கோபம் கொண்ட பிரம்மன், சுகரை கிளி உருவமாக சபித்தார். அதே சமயம் பாபநாசம் (தற்போதைய கோயில் பகுதி) சிவனை வணங்கினால் சாபம் நீங்கும் என கூறினார்.
இதன்படி சுக முனிவர் கிளி வடிவில் எண்ணற்ற கிளிகளோடு இணைந்து சிவனை வழிபட்டார். அப்போது வேடன் ஒருவர் கிளிகளை விரட்ட, அவை புற்றில் பதுங்கின. கோபம் கொண்ட வேடன் புற்றை வெட்ட, கிளிகள் அனைத்தும் இறந்தன. அந்த நேரத்தில் ராசகிளி (சுக முனிவர்) மட்டும் சுயம்புமூர்த்தியின் ஜடையில் சிறகை விரித்து காத்தது. வேடன் கிளியை வெட்ட, சுயம்புமூர்த்தியின் தலையில் இரத்தம் சிந்தியது. இறைவனை உணர்ந்த வேடன், வாளால் தன்னைத் தானே கொன்றுக்கொண்டான்.
இதனால் சாபம் நீங்கிய சுக முனிவர், “பெருமானே! உமது பெயர் சுகவனேஸ்வரராக இருந்து, இத்திருத்தலத்தில் அருள் புரிய வேண்டும்” என்று வேண்டினார். அதன்படி இறைவன் அருள்புரிந்ததாக புராணம் கூறுகிறது.
கோயில் சிறப்புகள்
- சுக முனிவரின் மூலவர், உற்சவ மூர்த்தி இரண்டும் உள்ளன.
- நவகிரகங்களில் ராகு, செவ்வாய் ஆகியோர் இத்தலத்தில் இடம் மாறிய நிலையில் உள்ளனர்.
- நவகிரக சன்னதியின் மேல் பல்லி, உடும்பு உருவங்கள் காணப்படுகின்றன. பல்லி விழும் குறைபாடுகள் நீங்கி, ஆரோக்கியம் கிடைக்கும்.
- விகடச்சக்கர விநாயகரை வணங்கினால், குழந்தைகளுக்கு ஏற்படும் பாலாரிஷ்ட தோஷங்கள் நீங்கும்.
அமைவிடம்
சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில், திருமணிமுத்தாற்றின் கரையோரம் இத்தலம் அமைந்துள்ளது.
திறப்பு நேரம்
காலை 6.00 மணி – 12.00 மணி
மாலை 4.00 மணி – 9.00 மணி வரை.