பாம் – திரைப்பட விமர்சனம்
மலையடிவாரத்தில் அமைந்துள்ள காளகம்மாபட்டி கிராமத்தில், ஒருகாலத்தில் ஒற்றுமையாக வாழ்ந்த மக்கள், காலப்போக்கில் வேற்றுமைகள் காரணமாக காளப்பட்டி, கம்மாபட்டி என இரண்டு பகுதிகளாக பிரிகிறார்கள்.
அவர்களை ஒன்றிணைக்க முயற்சிப்பவன் கதிர் (காளி வெங்கட்). ஆனால் அவனுடைய நெருங்கிய நண்பன் மணி (அர்ஜுன் தாஸ்), “இத்தனை சிக்கலான ஊர்களை விட்டு விலகிப்போவதே சிறந்தது” என்கிறான். கதிர் மறுக்கும் நிலையில், திடீரென அவன் இறந்து விடுகிறான். பின்னர், ஊரின் பூசாரி, “கதிர்தான் நம் குலசாமி” என்று அறிவித்து, “பிரிந்திருந்த இரு தரப்பினரும் ஒன்றிணைந்து அவனுக்கு இறுதி சடங்கு செய்தால், ஊருக்கு விடியல் பிறக்கும்” என்கிறார். அதை மக்கள் ஏற்றுக்கொண்டார்களா? ஊரை ஒன்று சேர்க்க மணியின் முயற்சி வெற்றி பெற்றதா? என்பதே கதை.
தமிழ்நாட்டின் பல ஊர்களில் சாதி வெறி, நாட்டார் தெய்வ வழிபாடு, மக்கள் நம்பிக்கைகள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருப்பதை, இயக்குநர் விஷால் வெங்கட் கற்பனையுடனும் நகைச்சுவை, எள்ளல் கலந்த சமூக விமர்சனத்துடனும் பொழுதுபோக்கு சினிமாவாக வடிவமைத்திருக்கிறார்.
திரைக்கதையின் முக்கிய தருணங்களில், கதிரின் சடலத்திலிருந்து எழும் சத்தத்தை மக்கள், குலசாமியின் அருள்வாக்காக ஏற்றுக்கொள்வது சிறப்பாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இது கதிரின் கதாபாத்திரத்துடன் பொருந்தி, நடிகர்களின் பங்களிப்பைத் தாண்டி இயக்குநரின் திறமை வெளிப்படச் செய்கிறது. அதேசமயம், சவுண்ட் டிசைனரின் துல்லியமான உழைப்பு, கதையின் உணர்ச்சி நம்பகத்தன்மையை அதிகரித்திருக்கிறது.
சடலமாக நடிப்பது எளிதல்ல. ஆனால் காளி வெங்கட், தனது உடல் மொழி மற்றும் முகபாவனையின் மூலம் சவாலை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளார். அவருடன் ஆழமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் அர்ஜுன் தாஸ் – இது அவருக்கான புதிய வகை கதாபாத்திரம். நடிகர் குடும்பத்தில் பிறந்த ஷிவாத்மிகா ராஜசேகர், தரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் அனுபவம் வாய்ந்த நாசர் மற்றும் அபிராமிக்கு போதிய வாய்ப்பு வழங்கப்படாதது குறை.
டி.இமானின் இசை மற்றும் ராஜ்குமாரின் ஒளிப்பதிவு படத்துக்கு வலுசேர்க்கின்றன. மகிழ்நனின் வசனங்கள் சில தருணங்களில் சிந்திக்க வைக்கின்றன.
சுயசாதியை கயிறில் கட்டி விளம்பரம் செய்யும் கீழ்த்தரமான நடைமுறைகளுக்கு எதிராக வலுவான விமர்சனத்தை முன்வைக்கும் இந்தப் படம், நகைச்சுவை மற்றும் எள்ளலால் மட்டுமல்லாது, த்ரில்லர் தன்மையினாலும் இறுதி வரை சுவாரஸ்யத்தைத் தக்கவைத்திருக்கிறது.