நவீன வேளாண் கருவிகளால் முன்னேற்றம் காணும் பழங்குடியினர் விவசாயிகள்!

பாரம்பரிய முறைகளில் மட்டுமே விவசாயம் செய்து வந்த பழங்குடியினர் வாழ்க்கையில், உழைப்பிற்கு உரிய வருமானம் கிடைக்க ‘ஐந்திணை’ தொல்குடி வேளாண்மை மேலாண்மை திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறந்துள்ளது. இந்தத் திட்டத்தின் முக்கிய குறிக்கோளில் ஒன்று, விவசாயத்தில் இயந்திர உபயோகத்தை ஊக்குவிப்பதாகும். இதற்காக தமிழ்நாடு அரசு, மத்திய வேளாண் பொறியியல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

திட்டப் பகுதிகளாக திருச்சி பச்சைமலை, நாமக்கல் கொல்லிமலை, கல்வராயன்மலை (சேலம், கள்ளக்குறிச்சி), திருவண்ணாமலை ஜவ்வாது மலை, திருப்பத்தூர் நெல்லிவாசல் நாடு, வேலூர் பீஞ்சமந்தை, தருமபுரி போதகாடு, ஈரோடு கடம்பூர் மலை, பெரம்பலூர் மலையாளப்பட்டி மற்றும் நீலகிரி ஆகிய 10 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. இங்கு வாழும் பழங்குடியினர் விவசாயிகளை ஒருங்கிணைத்து, 15 விவசாய சங்கங்கள் உருவாக்கப்பட்டன.

இச்சங்கங்களில் 3,417 குடும்பங்கள் இணைந்துள்ளன. மூன்று நிலைகளில் பயிற்சி அளிக்கப்பட்டு, விவசாயிகள் தங்களுக்கு தேவையான நவீன இயந்திரங்களைத் தேர்வு செய்வதற்கான வழிகாட்டுதலும் வழங்கப்பட்டது. நில அமைப்பு, பயிர் வகை மற்றும் தேவைக்கேற்ப இயந்திர பட்டியல் மத்திய வேளாண் பொறியியல் நிறுவனத்தால் தயார் செய்யப்பட்டது. இதற்காக 2023–24 மற்றும் 2024–25 நிதியாண்டுகளில் ரூ.6.56 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பழங்குடியினர் சங்கங்கள் 10% பங்கீடு செய்துள்ளன; மீதமுள்ள 90% தொகை அரசின் மானியம் ஆகும். மேலும், திட்டத்துக்கென தனியார் செயலி ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் கூறுகையில்:

“இத்திட்டம் வெற்றி பெற்றதன் அடிப்படையில் 2025–26ம் ஆண்டிற்கு ரூ.5.32 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 6 மாவட்டங்களில் 2,200 குடும்பங்கள் கொண்ட 10 புதிய சங்கங்கள் தொடங்கப்பட்டுள்ளன. விவசாய சங்கங்கள் தலைமையில் இயந்திர வைப்பு கூடங்கள் அரசின் உதவியுடன் கட்டப்பட்டு வருகின்றன. திட்டம், கூட்டுறவு மனப்பான்மை மற்றும் பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்து, வளங்களைப் பகிர்ந்து கொள்வதையும் ஏற்படுத்தியுள்ளது” என்றார்.

மேலும், இளைஞர்களை விவசாயத்தில் ஈர்த்து, லாபகரமான விவசாய முறைகள் உருவாக்கப்பட்டு, பழங்குடியினர் வாழ்வில் புதிய நம்பிக்கை உருவாகியுள்ளது.

பெரம்பலூர் மலையாளப்பட்டியைச் சேர்ந்த விவசாயி சி. சந்திரகுமார் கூறுகையில்:

“எங்கள் சங்கத்தில் 182 பேர் உள்ளனர். எனது 4.5 ஏக்கர் நிலத்தில் மக்காச்சோளம், மரவள்ளிக் கிழங்கு பயிரிட்டேன். டிராக்டர், களை இயந்திரம், மருந்து தெளிப்பான், அறுவடை இயந்திரம் போன்றவற்றைப் பயன்படுத்தியதால் நிலத்தை முழுமையாக பயன் படுத்த முடிந்தது. இதனால் ஒரு ஏக்கருக்கான செலவு 24% குறைந்து, என் ஆண்டு வருமானம் 42% அதிகரித்தது” என்றார்.

Facebook Comments Box