41-வது ஆண்டை நோக்கும் திண்டுக்கல் – வளர்ச்சி பாதையிலா?

40 ஆண்டுகளை நிறைவு செய்து, 41-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திண்டுக்கல் மாவட்டம் உண்மையில் மக்களை தன்னிறைவு பெறச் செய்துள்ளதா என்ற கேள்வி எழுகிறது.

மதுரை மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு, திண்டுக்கல் தலைமையிடமாகக் கொண்டு 1985 செப்டம்பர் 15-ம் தேதி அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் தலைமையில், அண்ணாவின் பிறந்த நாளில் உருவாக்கப்பட்டது திண்டுக்கல் மாவட்டம். ஆரம்பத்தில் அதிமுக ஆட்சி காலத்தில் ‘அண்ணா மாவட்டம்’ என்றும், திமுக ஆட்சியில் ‘காயிதேமில்லத் மாவட்டம்’ என்றும் அழைக்கப்பட்டு, தற்போது ‘திண்டுக்கல் மாவட்டம்’ என அழைக்கப்படுகிறது. தொழில், விவசாயம், ஆன்மீகம், சுற்றுலா என இயற்கையிலேயே வளம் பெற்ற மாவட்டமாகத் திகழ்கிறது.

தொழில்கள் வீழ்ச்சி

ஒருகாலத்தில் புகழ் பெற்ற திண்டுக்கல் பூட்டுத் தொழில், புவிசார் குறியீடு பெற்றிருந்தும் அலிகார் போன்ற ஊர்களின் போட்டியால் வீழ்ச்சி அடைந்துள்ளது. தோல் பதனிடும் தொழிற்சாலைகள் பெரும்பாலானவை மூடப்பட்டு, தற்போது சிலவே இயங்குகின்றன.

வேடசந்தூர் பகுதி நூற்பாலைகள் மட்டும் அப்பகுதி மக்களுக்கு சற்றே வேலைவாய்ப்பு தருகின்றன. புதிய தொழிற்சாலைகள் மாவட்டத்தில் வராமல் போனதால், மக்கள் கரூர், திருப்பூர், கோவை போன்ற அண்டை மாவட்டங்களுக்கு வேலைக்காக இடம்பெயர்கின்றனர். தொழில்துறை வளர்ச்சி ஏற்பட்டால் பல வேலை வாய்ப்புகள் உருவாகும்.

சுற்றுலா மேம்பாடு குறைவு

“மலைகளின் இளவரசி” என அழைக்கப்படும் கொடைக்கானல், மாநிலத்திலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. ஆனால் அடிப்படை வசதிகள் இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை. பல ஆண்டுகளாக “மல்டி லெவல் கார் பார்க்கிங்” திட்டம் பரிசீலனையில் மட்டுமே உள்ளது. இதனால் நகரில் வாகன நெரிசல் அதிகரித்து, பயணிகள் சிரமத்துக்குள்ளாகின்றனர்.

கொடைக்கானல் மலைக்கிராமங்களில் ஹோம் ஸ்டே போன்ற திட்டங்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கினாலே, மக்களுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கலாம். ஆனால் குடிநீர், கழிப்பறை வசதிகள் குறைவாகவே உள்ளன. பாலித்தீன் தடை இருந்தும் பயன்பாடு அதிகம், நகராட்சி நடவடிக்கை எடுக்காமல் தவிக்கிறது. கடந்த ஆண்டு தொடங்கிய ‘அட்வென்சர் பார்க்’ திட்டமும் மந்தமாக நடக்கிறது. ஊட்டி போல கவனம் பெறாமல், கொடைக்கானல் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது.

ஆன்மீக தளங்கள் – வளர்ச்சியா?

பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கான 2-வது ரோப் கார் திட்டம் 10 ஆண்டுகளாக நிறைவேறவில்லை. பக்தர்கள் ரோப் கார், இழுவை ரயிலில் நீண்டநேரம் காத்திருக்க வேண்டிய நிலை. குடிநீர், கழிப்பறை வசதிகள் போதுமானதாக இல்லை.

ஸ்ரீரங்கத்தில் உள்ளபோல், குறைந்த வாடகையில் தங்கும் வசதி “யாத்திரி நிவாஸ்” பழநியிலும் அமைய வேண்டும் என்பதே பக்தர்களின் கோரிக்கை. ஆனால் இதுவரை செயல்படுத்தப்படவில்லை. வையாபுரி கண்மாயை சுற்றி திறந்த வெளிக் கழிப்பிடங்கள் சுகாதாரக்கேட்டை உண்டாக்குகின்றன. சுகாதாரம் காக்க அரசு கவனம் செலுத்த வேண்டும் என்பது மக்களின் வேண்டுகோள்.

சில சாதனைகள்

கிராமப்புற சாலைகள் சீராக அமைக்கப்பட்டுள்ளன. குடிநீர் தேவைக்காக பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. முன்னர் தண்ணீர் பிரச்சனையால் “திண்டுக்கல்லுக்கு பொண்ணு கொடுக்க மாட்டோம்” என்ற நிலை இருந்தது; ஆனால் தற்போது அது மாறியுள்ளது.

கல்வி துறையில் முன்னேற்றமாக, கடந்த 4 ஆண்டுகளில் 6 கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. அரசு மருத்துவக் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி ஆகியவை கல்வி வளர்ச்சிக்கு துணைபுரிகின்றன.

பேருந்து நிலையம் இடமாற்றத் திட்டம் மெதுவாக உள்ளதால், போக்குவரத்து நெரிசல் நீங்காமல் உள்ளது. பழநி பச்சையாறு அணைத் திட்டம், நிலக்கோட்டையில் சென்ட் தொழிற்சாலை, திண்டுக்கல்–சென்னை ரயில் சேவை போன்ற கோரிக்கைகள் இன்னும் நிறைவேறவில்லை.

எதிர்பார்ப்பு

திண்டுக்கல் மாவட்ட வளர்ச்சிக்காக தொலைநோக்குத் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டால், மாவட்டம் விரைவில் முன்னேற்றம் அடையும். மாவட்டம் தொடங்கிய நாளை ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாகக் கொண்டாடி, வருங்கால சந்ததியினர் அறிந்துகொள்ளச் செய்வது மக்களின் எதிர்பார்ப்பு.

Facebook Comments Box