“இந்தி, இந்திய மொழிகளின் தோழன்; போட்டியாளர் அல்ல” – மத்திய அமைச்சர் அமித் ஷா

இந்தி தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில்,

“இந்தி மொழி, பிற இந்திய மொழிகளின் எதிரி அல்ல; நண்பனாக உள்ளது. நமது நாடு இயல்பாகவே மொழிகளின் பன்மையால் சிறப்பாக திகழ்கிறது. நமது கலாச்சாரம், மரபுகள், அறிவியல், தத்துவம், ஆன்மிகம் ஆகியவை அனைத்தும் தலைமுறையிலிருந்து தலைமுறைக்கு பரவியதற்கு மொழிகள் முக்கிய தளமாக இருந்துள்ளன.

இமயமலையிலிருந்து தெற்கின் கடற்கரை வரை, பாலைவனங்களிலிருந்து அடர்ந்த காடுகள் வரை, மொழிகள் மனிதர்களுக்கு ஒற்றுமையையும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளன. ‘ஒன்றாகச் சிந்திப்போம், ஒன்றாக நடப்போம், ஒன்றாகப் பேசுவோம்’ என்பதே நமது மொழி-கலாச்சார மரபின் மையக் கோட்பாடு.

இந்திய மொழிகள் அனைத்தும் ஒன்றுக்கொன்று துணையாக இருந்து, சமூகத்துக்கும் ஒவ்வொரு தரப்பினருக்கும் வெளிப்பாட்டிற்கான வாய்ப்பை வழங்குகின்றன. திருவள்ளுவர், சுப்பிரமணிய பாரதி, துளசிதாஸ், கபீர், சூர்தாஸ், சங்கரதேவா, மாதவ்தேவா, பூபேன் ஹசாரிகா போன்றோரின் படைப்புகள் இந்தியாவின் வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு எங்கும் மக்களால் போற்றப்படுகின்றன.

அடிமைத்தனத்தின் கடின காலங்களிலும், இந்திய மொழிகள் எதிர்ப்பின் குரலாகவும் சுதந்திரப் போராட்டத்தின் கருவியாகவும் இருந்தன. ‘வந்தே மாதரம்’, ‘ஜெய் ஹிந்த்’ போன்ற முழக்கங்கள் மொழியியல் உணர்விலிருந்து தோன்றின.

நாடு சுதந்திரம் பெற்றபோது, 1949 செப்டம்பர் 14 அன்று தேவநாகரி எழுத்துக்களில் எழுதப்பட்ட இந்தி, அதிகாரப்பூர்வ மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அரசியலமைப்பின் பிரிவு 351, இந்தியை தேசிய ஒருமைப்பாட்டிற்கான பயனுள்ள ஊடகமாக வளர்க்கும் பொறுப்பை வழங்குகிறது.

கடந்த ஒரு தசாப்தத்தில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்திய மொழிகள் மறுமலர்ச்சி காலத்தை அடைந்துள்ளன. சர்வதேச மேடைகளில் அவர் இந்தி மற்றும் பிற இந்திய மொழிகளில் உரையாற்றி, அவற்றின் கண்ணியத்தை உயர்த்தியுள்ளார்.

அலுவல் மொழியாக இந்தி 76 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. 2014 முதல், அரசுப் பணிகளில் இந்தி பயன்பாடு ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. மேலும், 2024 இல் ‘பாரதிய பாஷா அனுபாக்’ நிறுவப்பட்டு, இந்திய மொழிகளுக்கிடையே தடையற்ற மொழிபெயர்ப்பு ஏற்படுத்தப்படுகிறது.

மொழிகள் வெறும் தகவல் பரிமாற்ற கருவி மட்டுமல்ல, அறிவியல், தொழில்நுட்பம், கல்வி, நீதி, நிர்வாகம் ஆகிய துறைகளின் அடித்தளமாக வளர்க்கப்படுகின்றன. டிஜிட்டல் இந்தியா, செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் இந்திய மொழிகள் நாட்டை உலக அளவில் முன்னேற்றும் சக்தியாக இருக்கும்.

மொழி என்பது மழைத்துளி போல மனச்சோர்வை கழுவி, புதுப்புது ஆற்றலை அளிக்கிறது. பாட்டிகளின் தாலாட்டு முதல் குழந்தைகளின் கற்பனைக் கதைகள் வரை, நமது மொழிகள் சமூகத்துக்கு உயிரும் தன்னம்பிக்கையும் அளித்துள்ளன.

மிதிலா கவிஞர் வித்யாபதி கூறியது போல, ஒவ்வொருவரின் சொந்த மொழியே இனிமையானது. எனவே, இந்தி தினத்தில், இந்தி உட்பட அனைத்து இந்திய மொழிகளையும் மதித்து, தன்னம்பிக்கையுடன் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவோம். அனைவருக்கும் இந்தி தின வாழ்த்துகள். வந்தே மாதரம்” என அமித் ஷா தெரிவித்துள்ளார்.

Facebook Comments Box