பஹல்காமில் உயிரிழந்த 26 பேரை விட பணம் முக்கியமா? – இந்தியா-பாக் போட்டி குறித்து ஒவைசி கண்டனம்

பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் பலியான நிலையில், இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை நடத்த மத்திய பாஜக அரசு எடுத்துள்ள முடிவை, ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி கடுமையாக விமர்சித்துள்ளார்.

இன்று துபாயில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை டி20 போட்டியில் இந்தியா, பாகிஸ்தானுடன் மோதுகிறது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில், ஊடகங்களுக்கு பேசிய ஒவைசி,

“அசாம் முதல்வர், உத்தரப் பிரதேச முதல்வர் உள்ளிட்டோரிடம் நான் கேட்கிறேன். பஹல்காமில் 26 பேரை சுட்டுக் கொன்ற பாகிஸ்தானுக்கு எதிராக கிரிக்கெட் விளையாடுவதைத் தடுக்க உங்களுக்கு அதிகாரமே இல்லையா?

‘இரத்தமும் நீரும் ஒன்றாக பாயாது, பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக நடக்காது’ என்று நீங்கள் சொன்னீர்கள். ஆனால் பிசிசிஐக்கு ஒரு போட்டியிலிருந்து எவ்வளவு பணம் வரும்? ரூ.2,000 கோடி, ரூ.3,000 கோடி கிடைத்தாலும், அது 26 பேரின் உயிர்களை விட மேலானதா? பாஜக இதற்கு பதில் சொல்ல வேண்டும். நேற்று நாங்கள் அந்த உயிரிழந்தவர்களுடன் நின்றோம்; இன்றும், நாளையும் அவர்களோடு நிற்போம்” என்று கூறினார்.

அதேபோல் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால், “பாகிஸ்தானுடன் இந்தப் போட்டியை நடத்த வேண்டிய அவசியம் என்ன? நாடு முழுவதும் மக்கள் எதிர்க்கிறார்கள். இருந்தும் ஏன் போட்டி நடத்தப்படுகிறது? இது டிரம்பின் அழுத்தத்தாலா? அவரிடம் எவ்வளவு வரை தாழ்ந்து போகப்போகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.

சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரேவும், இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து, மகாராஷ்டிரா முழுவதும் ‘சிந்தூர் போராட்டம்’ நடத்த இருப்பதாக அறிவித்துள்ளார்.

Facebook Comments Box