புட்டபர்த்தி ஸ்ரீ சத்ய சாய் பாபா அவதார தின நூற்றாண்டு விழா: 2026 நவம்பர் வரை சேவைப் பணிகள்
ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் அவதார தின நூற்றாண்டு விழா 2026 நவம்பர் மாதம் வரை விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பல்வேறு சேவைப் பணிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.
சென்னையில் செய்தியாளர்களிடம் ஸ்ரீ சத்ய சாய் சேவா அமைப்பின் தேசியத் தலைவர் நிமிஷ் பாண்டியா தெரிவித்ததாவது:
“பகவான் புட்டபர்த்தி ஸ்ரீ சாய் பாபாவின் அருளாசியுடன் ஆன்மிக வழியில் அன்பைப் பகிர்ந்து, இயலாதவர்களுக்கு சேவையாற்றுவதே எங்களின் நோக்கம். அவரின் வழிகாட்டுதலின்படி கல்வி, மருத்துவ சேவைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. திறன் மையங்கள் மூலம் சுயதொழிலுக்கான பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன” என்றார்.
அவரது 100-வது அவதார தினத்தை முன்னிட்டு, நூற்றாண்டு விழா கடந்த ஏப்ரல் 24-ம் தேதி தொடங்கியது. இந்நிகழ்ச்சி 2026 நவம்பர் 23 வரை நீடிக்கும். ஒன்றரை ஆண்டுக் காலத்தில் ரத்த தான முகாம்கள், மருத்துவ முகாம்கள், மரம் நடுதல், கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு பணிகள் நடைபெறவுள்ளன.
புட்டபர்த்தியில் வரும் நவம்பரில் நடைபெறவுள்ள நூற்றாண்டு விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ‘சுந்தரம்’ ஆலயத்தில் நவம்பர் மாதம் ஒருவாரத்துக்கு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஒரு கோடி மரங்கள் நடும் இலக்கு வைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இதுவரை சுமார் 40 லட்சம் மரங்கள் நடப்பட்டுள்ளன. அதில் தமிழகத்தில் மட்டும் 25,000 மரங்கள் நடப்பட்டுள்ளன. மேலும், 1,000 மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை கை, கால்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தில் 125 பேர் பலன் பெற்றுள்ளனர்.
“இன்னும் பல்வேறு சேவைப் பணிகளை முன்னெடுக்க உள்ளோம். இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, சிறந்த சமூக சூழலை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” என்றும் நிமிஷ் பாண்டியா தெரிவித்தார்.
இந்த நிகழ்வில், ஸ்ரீ சத்ய சாய் சேவா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோட்டீஸ்வர ராவ், தென் மண்டல பொறுப்பாளர் முகுந்தன், தமிழகத் தலைவர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.