பிஹார் SIR வழக்கு: அக்டோபர் 7-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் இறுதி விசாரணை

பிஹாரில் நடைபெற்ற சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision) சட்டப்படி செல்லுமா என்ற விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் இறுதி விசாரணையை அக்டோபர் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

சமீபத்தில் பிஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியில் சுமார் 65 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டன. இதற்கு எதிராக ஏடிஆர் அமைப்பைச் சேர்த்து பல தரப்பினர் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூரியகாந்த், ஜோய்மால்ய பக்சி அமர்வு விசாரித்து வருகிறது.

முந்தைய விசாரணையில், வாக்காளர் பட்டியலில் பெயரை உறுதிப்படுத்தும் ஆவணங்களில் ஆதாரையும் சேர்க்க Election Commission பரிசீலிக்க வேண்டும் என நீதிமன்றம் பரிந்துரைத்தது. ஆதார் குடியுரிமைக்கான சான்றாக ஏற்க முடியாது, ஆனால் அடையாள ஆவணமாக மட்டும் ஏற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தது.

இன்று நடைபெற்ற விசாரணையில்,

  • பிஹார் வாக்காளர் குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்திய வழக்கறிஞர் விரந்தா குரோவர், “சிறப்பு தீவிர திருத்தம் சட்ட விரோதமானது; அதனால் பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடாது” என வாதிட்டார்.
  • ஏடிஆர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், “தனது சொந்த வழிகாட்டுதல்களை தேர்தல் ஆணையமே மீறியுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கோரியவர்களில் 30% பேர் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர்” என குற்றம் சாட்டினார்.

இதற்கு பதிலளித்த நீதிபதிகள்,

“தேர்தல் ஆணையம் அரசியலமைப்பின் வரம்புகளுக்குள் செயல்படும் என நீதிமன்றம் நம்புகிறது. இறுதி வாக்காளர் பட்டியல் அக்டோபர் 1-ல் வெளியாக உள்ளது. அதை ஆய்வு செய்வது சிரமமில்லை. சட்ட விரோதம் நிரூபிக்கப்பட்டால் அது கண்டிப்பாக ரத்து செய்யப்படும். சிறப்பு தீவிர திருத்தம் குறித்த வழக்கின் இறுதி விசாரணை அக்டோபர் 7-க்கு ஒத்திவைக்கப்படுகிறது. இடைப்பட்ட காலத்தில் துண்டு துண்டாக கருத்து கூற நீதிமன்றம் விரும்பவில்லை” என தெரிவித்தனர்.

Facebook Comments Box