விஜய் – ஜோதிகா நடித்த ‘குஷி’ மறுவெளியீடு செப்.25-ல்
விஜய், ஜோதிகா இணைந்து நடித்த ‘குஷி’ திரைப்படம் வரும் செப்டம்பர் 25ஆம் தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளிவருகிறது.
சமீப காலமாக பழைய படங்கள் மறுவெளியீடு செய்யப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அந்த வரிசையில், எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் வெளியான ‘குஷி’ படத்தை, ‘கில்லி’ படத்தை மறுவெளியீடு செய்த சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் வெளியிடுகிறது. இதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
2000ஆம் ஆண்டு மே 19ஆம் தேதி வெளிவந்த இப்படம், ஏ.எம். ரத்னம் தயாரிப்பில் உருவாகியது. இதில் விஜய், ஜோதிகா, மும்தாஜ், விவேக், விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தேவா இசையமைத்த பாடல்கள் இன்றளவும் ரசிகர்களால் ரசிக்கப்படுகின்றன.
படம் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து, ஹிந்தி மற்றும் கன்னட மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.