உடன்குடி அனல்மின் நிலையத்தில் சோதனை மின்னுற்பத்தி தொடக்கம் – மின்வாரிய அதிகாரிகள்

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் உருவாகி வரும் அனல்மின் நிலையத்தில் சோதனை மின்னுற்பத்தி தொடங்கியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரூ.13,076 கோடி செலவில், தலா 660 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அலகுகளுடன் இந்நிலையம் அமைக்கப்படுகிறது. 2012ஆம் ஆண்டு திட்டம் அறிவிக்கப்பட்டு, 2017ஆம் ஆண்டு கட்டுமான பணிகள் தொடங்கின. நிலக்கரி கொண்டு வர உடன்குடி கடற்கரையிலிருந்து 5 கி.மீ தூரத்தில் கடல் முனையமும் அமைக்கப்பட்டுள்ளது.

பிஎச்இஎல் நிறுவனம் மேற்கொண்டு வரும் இத்திட்டம், 2021-22ஆம் ஆண்டில் மின்னுற்பத்தி தொடங்க திட்டமிடப்பட்டிருந்தாலும், பணிகள் தாமதமாகி இப்போது தான் முன்னேற்றம் கண்டுள்ளது. கடந்த 11ஆம் தேதி முதல் அலகில் சோதனை தொடங்கப்பட்டு, 87 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து, மின் கட்டமைப்பில் சேர்க்கப்பட்டது.

இதுகுறித்து அதிகாரிகள், “பல தொழில்நுட்ப சவால்களை சமாளித்து தற்போது கனரக உலை எண்ணெய் மூலம் சோதனை மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. நிலக்கரி போக்குவரத்து அமைப்பு விரைவில் முடிவடையும். ஒரு அலகு 72 மணி நேரம் தொடர்ச்சியாக இயங்கிய பின் தான் வணிக மின்சாரம் உற்பத்தி துவங்கியதாக அறிவிக்கப்படும். எனவே இந்த ஆண்டு இறுதிக்குள் முழுமையான மின்சார உற்பத்தி தொடங்கும்” என்று தெரிவித்தனர்.

Facebook Comments Box