‘கெஞ்சியும் உதவவில்லை…’ – டெல்லியில் பிஎம்டபுள்யூ விபத்தில் உயிரிழந்த அதிகாரி மனைவி வாக்குமூலம்

டெல்லியில் தவுலா குவான் அருகே ஞாயிற்றுக்கிழமை நடந்த பிஎம்டபுள்யூ கார் விபத்தில் உயிரிழந்த மத்திய அரசு அதிகாரி நவ்ஜோத் சிங்கின் மனைவி, “விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநரிடம், அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு பலமுறை கெஞ்சினேன்; ஆனால் அவர் கேட்கவே இல்லை” என்று போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பொருளாதார விவகாரத் துறையின் துணைச் செயலாளர் நவ்ஜோத் சிங், மனைவி சந்தீப் கவுருடன் பங்களா சாஹிப் குருத்வாராவில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, ரிங் ரோட்டில் தவுலா குவான் அருகே, பின்புறம் வந்த நீல நிற பிஎம்டபுள்யூ கார் மோட்டார் சைக்கிளில் மோதியது. தாக்கத்தின் பேரில் இருவரும் சாலையில் விழுந்தனர். நவ்ஜோத் சிங்கின் தலை, முகம், காலில் கடுமையான காயங்கள் ஏற்பட்டன; சந்தீப் கவுருக்கு எலும்பு முறிவு, தலையில் காயம் ஏற்பட்டது.

உயிரிழந்த நவ்ஜோத் சிங்கின் மனைவி அளித்த வாக்குமூலத்தில், “விபத்துக்குப் பிறகு சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டேன். ஆனால் பிஎம்டபுள்யூ ஓட்டிய பெண் அதை மறுத்து, சம்பவ இடத்திலிருந்து சுமார் 19 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு சிறிய மருத்துவமனைக்கே அழைத்துச் சென்றார். அவர் காரை அதிவேகமாக ஓட்டியதால் கட்டுப்பாட்டை இழந்து எங்கள் பைக்கில் மோதினார்” என்று கூறியுள்ளார்.

ஜிடிபி நகரில் உள்ள நியூலைஃப் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, நவ்ஜோத் சிங் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். கவுர் அங்கு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் அவர்களின் மகன் வந்து அவரை வெங்கடேஸ்வர் மருத்துவமனைக்கு மாற்றினார்.

நவ்ஜோத் சிங்கின் மரணத்துக்குப் பொறுப்பான பிஎம்டபுள்யூ ஓட்டுநர் ககன்ப்ரீத் கவுர் இன்று மருத்துவமனையிலேயே காவலில் எடுக்கப்பட்டார். அவர்மீது கொலைக் குற்றச்சாட்டு உள்பட பிஎன்எஸ் பிரிவுகள் 281, 125, 105, 238-இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

உயிரிழந்த நவ்ஜோத் சிங்கின் மகன் நவ்னூர் சிங், “என் தந்தையை எயிம்ஸ் அல்லது வேறு பெரிய மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு சென்றிருந்தால் அவரை காப்பாற்றியிருப்பார்கள். ஆனால், பிஎம்டபுள்யூ ஓட்டிய பெண்ணுக்குச் சொந்தமான மருத்துவமனைக்கு – அது 20 கிலோமீட்டர் தொலைவில் இருந்தாலும் – அழைத்துச் சென்றனர்” எனக் குற்றம்சாட்டினார்.

Facebook Comments Box