“நான் அப்படி சொல்லவே இல்லை!” – ரிக்கி பான்டிங்கை பதறவைத்த போலிச் செய்தி!

போலிச் செய்திகளின் சதி வலைப்பின்னலின் சர்ச்சையின் மையக் கதாபாத்திரமாகி, பிறகு அந்தச் செய்திகளைக் கடுமையாகக் கண்டித்து மீண்டு வந்துள்ளார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் லெஜண்ட் ரிக்கி பான்டிங்.

என்ன நடந்தது?

இந்தியா – பாகிஸ்தான் ஆசியக் கோப்பை டி20 போட்டியில் இந்திய வீரர்கள், பாகிஸ்தான் வீரர்களுடன் போட்டி முடிந்தவுடன் பரஸ்பர கைகுலுக்கல் சடங்கைப் புறக்கணித்தது இரு நாட்டு ரசிகர்களிடையே முரண்பட்ட எதிர்வினைகளை ஏற்படுத்தியது. இந்த சூழ்நிலையில், இந்திய வீரர்கள் கைகுலுக்க மறுத்தது பற்றிய போலிச் செய்தி ஒன்று, பான்டிங் கூறியதாக எக்ஸ் வலைத்தளத்தில் பரவியது. இதனால் அவர் நெட்டிசன்களின் வசை வலையில் சிக்கினார்.

பான்டிங் கூறியதாக வெளியான போலி மேற்கோள்

“இந்தப் போட்டி என்றென்றும் இந்தியாதான் இங்கே பெரிய தோல்வியாளர் என்றே நினைவில் இருக்கும்” என்கிற போலி மேற்கோள் பான்டிங் பெயரில் வெளியானது.

ஆனால் உண்மையில், பான்டிங் இதுபோன்ற எந்த கருத்தையும் கூறவில்லை என்பது உறுதியாகியுள்ளது. இது முற்றிலும் கற்பனையாக உருவாக்கப்பட்ட போலிச் செய்தி என தெரியவந்துள்ளது.

ஸ்கை ஸ்போர்ட்ஸ் சேனலில் பான்டிங் கூறியதாக போலியாக பரப்பப்பட்ட வாசகத்தில்,

“இந்திய அணியுடன் பாகிஸ்தான் வீரர்கள் கைகுலுக்க வேண்டும் என்று விரும்பிய விதம், ஜெண்டில்மென்களின் ஆட்டத்தில் பாகிஸ்தானை சாம்பியன்களாக அழியாப் புகழுக்கு இட்டுச் செல்ல, இந்திய வீரர்களை நிரந்தர இழப்பாளர்களாக்கிவிட்டது” எனக் கூறப்பட்டிருந்தது.

பான்டிங்கின் மறுப்பு

இது குறித்து ரிக்கி பான்டிங் தெளிவுபடுத்தியபோது,

“சமூக வலைத்தளத்தில் நான் கூறியதாக வெளியான செய்திகள் பற்றி அறிவேன். தயவுசெய்து தெரிந்து கொள்ளுங்கள், நான் நிச்சயமாக, உறுதியாக அதுபோன்று எதுவும் கூறவில்லை. உண்மையில், ஆசியக் கோப்பை பற்றி நான் எந்தவிதமான கருத்தையும் பொதுவில் கூறியதில்லை” என விளக்கமளித்தார்.

தவறான செய்தியால் பாதிப்பு

செய்யாத தவறுக்கு, பேசாத பேச்சுக்காக ரிக்கி பான்டிங் சிக்கிக்கொண்டார். தற்போது அந்த போலிச் செய்தி மற்றும் அவதூறுகள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Facebook Comments Box