வருமான வரி கணக்கு தாக்கலுக்கு அவகாசம் நீட்டிப்பு இல்லை: மத்திய அரசு விளக்கம்
வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் (செப். 15) நிறைவு பெறுகிறது. இதற்கான அவகாசம் நீட்டிக்கப்படவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
2025-26ம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் (ஐடிஆர்) செய்வதற்கான காலக்கெடுவை மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) செப்டம்பர் 30 வரை நீட்டித்துள்ளதாக வாட்ஸ்அப், சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்படுகிறது. இதுபோன்ற எந்த உத்தரவும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்பதை நிதி அமைச்சக அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
ஏற்கெனவே, ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூலை 31 என அறிவிக்கப்பட்டு, செப்டம்பர் 15 வரை நீடிக்கப்பட்டது. இந்த நிலையில், மீண்டும் காலக்கெடு நீட்டிக்கப்பட்டதாக வெளியான போலியான செய்திகளை வரி செலுத்துவோர் நம்பி ஏமாற வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
புதிதாக வெளியிடப்படும் தகவல்களுக்கு வருமான வரி துறையின் அதிகாரபூர்வ இணையதளத்தை மட்டுமே அணுக வேண்டும் என்று வரி செலுத்துவோர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வரி தணிக்கைக்கு உட்படுத்தப்படாதவர்களும், கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி இன்றுடன் (செப்.15) முடிவடைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.