நேபாளத்தில் ஊரடங்கு உத்தரவு வாபஸ்

நேபாளம் முழுவதும் நேற்று ஊரடங்கு வாபஸ் பெறப்பட்டது.

நேபாளத்தில் அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், பிரபலங்களின் வாரிசுகள் தங்களது ஆடம்பர வாழ்க்கையை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தனர். இதை இளம் தலைமுறையினர் கடுமையாக விமர்சித்தனர். இதன் காரணமாக கடந்த 4-ம் தேதி நேபாளம் முழுவதும் 26 சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

இதையடுத்து, அரசுக்கு எதிராக இளைஞர்கள் தலைநகர் காத்மாண்டுவில் திரண்டு பல்வேறு போராட்டங்களை நடத்தினர். அந்த போராட்டம் கலவரமாக மாறி, 51 பேர் உயிரிழந்தனர். 1,300-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்நிலையில் நேபாள உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி நேற்று முன்தினம் இடைக்கால பிரதமராக பதவியேற்றார். அவர் பதவியேற்றவுடன் நாடு முழுவதும் நேற்று ஊரடங்கு வாபஸ் பெறப்பட்டது. தலைநகர் காத்மாண்டு உட்பட நேபாளம் முழுவதும் இயல்பு நிலை திரும்பியது. மேலும் வன்முறையால் பாதிக்கப்பட்ட நாடாளுமன்றம், உச்ச நீதிமன்றம் புனரமைக்கப்படும் என்று இடைக்கால அரசு அறிவித்துள்ளது.

நேபாள முன்னாள் பிரதமர் சர்மா ஒலி சீனாவின் தீவிர ஆதரவாளர் ஆவார். இதன் காரணமாக ஆட்சி மாற்றம் குறித்து சீனா எந்த கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகிறது. அதேவேளை புதிய பிரதமர் சுசீலா கார்கிக்கு இந்தியா, பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளன.

அடுத்த 6 மாதங்களில் நேபாளத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போராட்டக் குழுக்கள் சார்பில் புதிதாக கட்சிகள் தொடங்கப்பட உள்ளன. அந்த புதிய கட்சிகள் முதல்முறையாக தேர்தலை சந்திக்கத் திட்டமிட்டுள்ளன.

தற்போது நேபாளத்தில் 119 கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 8 கட்சிகள் தேசிய அங்கீகாரம் பெற்றுள்ளன. நேபாள காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் — சிபிஎன் (யுஎம்எல்), சிபிஎன் (எம்சி) — ஆகியவை இதுவரை மாறி மாறி ஆட்சி அமைத்து வந்தன.

Facebook Comments Box