மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய உலகத் தரமான நகரம்: மாஸ்டர் பிளான் தயாரிக்க டிட்கோ முன்மொழிவு
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் 2,000 ஏக்கர் பரப்பளவில் புதிய சர்வதேச நகரம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையை (மாஸ்டர் பிளான்) தயாரிக்க, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் (டிட்கோ) ஒப்பந்தம் கோரியுள்ளது.
2025-26ஆம் நிதியாண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:
“நாட்டிலேயே நகரமயமாதல் வேகமாக நடைபெற்று வரும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாகும். குறிப்பாக, சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர், திருச்சி, மதுரை போன்ற பெருநகரங்களை நோக்கி மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர்.
அதிகரித்து வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப, சாலை, குடிநீர், தெருவிளக்கு, கழிவுநீர் வடிகால் போன்ற அடிப்படை சேவைகளும், பேருந்து போக்குவரத்து, கல்வி, சுகாதார வசதிகளும் விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளில் வழங்கப்படுகின்றன. இதற்காக உள்ளாட்சி அமைப்புகள் பெருமளவு நிதி ஒதுக்கீடு செய்து வருகின்றன.
ஆனால், நகரங்கள் சீரற்ற வகையில் பரவி விரிவடைவதற்குப் பதிலாக, மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய ஒருங்கிணைந்த புதிய நகரங்களை உருவாக்குவது சிறந்தது என நகரமைப்பு நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர். இதன்படி, முதல்கட்டமாக சென்னைக்கு அருகில் 2,000 ஏக்கர் பரப்பில் ஒரு புதிய நகரம் உருவாக்கப்படும்.
இந்த நகரத்தில், தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள், நிதிநுட்ப வணிக வளாகங்கள், ஆராய்ச்சி மற்றும் உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள், வங்கிகள், காப்பீடு நிறுவனங்கள், வர்த்தக வளாகங்கள், மாநாட்டு மையங்கள் மட்டுமின்றி, அரசு மற்றும் தனியார் துறைகளின் கல்வி மற்றும் சுகாதார சேவை நிறுவனங்களும் அமைய உள்ளன. அனைவருக்கும் வீடுகள் கிடைக்கக்கூடிய வகையில் பன்னடுக்கு குடியிருப்புகளும் கட்டப்படும்” என அவர் அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பையடுத்து, சென்னை அருகே பல இடங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதில், மதுராந்தகத்தில் 2,000 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய சர்வதேச நகரம் அமைக்க தமிழக அரசு தீர்மானித்துள்ளது. இதனை செயல்படுத்துவதற்காக தொழில் துறைக்குட்பட்ட தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் (டிட்கோ) தேர்வு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில், மதுராந்தகத்தில் உருவாகும் புதிய நகரத்திற்கான மாஸ்டர் பிளான் தயாரிப்பதற்கான நிறுவனத்தைத் தேர்வு செய்ய, டிட்கோ ஒப்பந்தம் கோரியுள்ளது.