அக்டோபர் 2 வரை பிரதமர் மோடி பெற்ற பரிசுப் பொருட்கள் இணைய ஏலம்
பிரதமர் நரேந்திர மோடி பெற்ற பரிசுப் பொருட்கள் இணையதளத்தில் ஏலத்திற்கு விடப்பட்டுள்ளன. பரிசுகளின் ஆரம்ப விலை ரூ.1,700 முதல் அதிகபட்சம் ரூ.1.03 கோடி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிகழ்ச்சிகளில் பிரதமருக்கு வழங்கப்பட்ட பரிசுகள் 2019 முதல் முறையே ஏலத்தில் விடப்பட்டு வருகின்றன. அதன்படி, 7வது ஏலம் அவரது பிறந்த நாளான செப்டம்பர் 17-ம் தேதி www.pmmementos.gov.in தளத்தில் தொடங்கியது. மொத்தம் 1,300-க்கும் மேற்பட்ட பொருட்கள் அக்டோபர் 2-ம் தேதி வரை ஏலத்திற்கு இருக்கும்.
இந்த ஏலத்திலிருந்து கிடைக்கும் தொகை தூய்மையான கங்கை திட்டத்துக்கு நன்கொடையாக வழங்கப்படும். இந்த முறை பாராலிம்பிக்ஸ் 2024 வீரர்கள் வழங்கிய பரிசுகள், சிலைகள், ஓவியங்கள், தொப்பிகள், வாள்கள் உள்ளிட்ட பல பொருட்கள் இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக, துல்ஜா பவானி சிலைக்கு ரூ.1.03 கோடி அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், வெள்ளிப் பதக்கம் வென்ற நிஷாத் குமார், வெண்கலப் பதக்கம் வென்ற அஜித் சிங் மற்றும் சிம்ரன் சர்மா ஆகியோரின் காலணிகள் தலா ரூ.7.70 லட்சம் ஆரம்ப விலையில் ஏலத்திற்கு உள்ளன.
மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்ததாவது: “கடந்த 6 ஆண்டுகளில் 7,000-க்கும் மேற்பட்ட பரிசுகள் ஏலத்தில் விடப்பட்டு, ரூ.50.33 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. அந்தத் தொகை அனைத்தும் தூய்மையான கங்கை திட்டத்துக்கே வழங்கப்பட்டுள்ளது. இம்முறையும் அதேபோல் வழங்கப்படும்” என்றார்.