போதைப் பொருள் உற்பத்தி, கடத்தலில் 23 நாடுகள் தொடர்பு – இந்தியா, சீனா இடம்பிடித்தவை: ட்ரம்ப்
போதைப் பொருள் உற்பத்தி மற்றும் கடத்தலில் சீனா, ஆப்கானிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 23 நாடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த பட்டியலில் ஆப்கானிஸ்தான், பஹாமாஸ், பெலிஸ், பொலிவியா, மியான்மர், சீனா, கொலம்பியா, கோஸ்டாரிகா, டொமினிகன் ரிபப்ளிக், ஈக்வடார், எல் சால்வடார், கவுதமாலா, ஹைட்டி, ஹொண்டூராஸ், இந்தியா, ஜமைக்கா, லாவோஸ், மெக்சிகோ, நிகாரகுவா, பாகிஸ்தான், பனாமா, பெரு மற்றும் வெனிசுலா ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இந்தியா – பாகிஸ்தான் எல்லை வழியாக ட்ரோன் மூலம் போதைப்பொருள் கடத்தல் அதிகம் நடைபெறுகிறது. இந்நாடுகள் போதைப்பொருள் உற்பத்தி மற்றும் கடத்தலில் ஈடுபடுவதால், அமெரிக்கா மற்றும் அதன் குடிமக்களுக்கு அபாயமாக உள்ளன. போதைப்பொருள் அதிகம் பயன்படுத்தப்படுவதால் அமெரிக்காவில் 18–44 வயதுக்குட்பட்டோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும், இந்த பட்டியலில் இருப்பது, அந்த நாடுகள் அமெரிக்காவுடன் நல்லுறவு பேணவில்லை அல்லது போதை ஒழிப்பு நடவடிக்கையில் தோல்வியடைந்தன என்பது அர்த்தமல்ல. ஆனால் ஆப்கானிஸ்தான், பொலிவியா, மியான்மர், கொலம்பியா மற்றும் வெனிசுலா போன்றவை போதைப்பொருள் தடுப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.
சீனாவைப் பற்றி அவர், “ஃபெண்டானில் தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருட்களை அதிக அளவில் வழங்குவதில் சீனா முதலிடம் வகிக்கிறது. நிடாசென்ஸ், மெத்தம்பெட்டமைன் போன்ற செயற்கை போதைப்பொருட்களின் உற்பத்தியிலும் சீனா முன்னணியில் உள்ளது. சீன அரசு, இத்தகைய ஆபத்தான வேதிப்பொருட்கள் குற்றவாளிகள் கைக்கு செல்லாமல் தடுக்க வேண்டும்” என்றார்.
ஆப்கானிஸ்தானைப் பற்றியும் ட்ரம்ப், “தலிபான் போதைப்பொருள் கட்டுப்பாட்டில் பல வாக்குறுதிகள் அளித்தது. ஆனால் அவை எதுவும் நடைமுறைக்கு வரவில்லை” என்று விமர்சித்தார்.
மேலும், இந்தியா மற்றும் சீனாவும் போதைப்பொருள் தயாரிப்புக்கு தேவையான மூலப்பொருட்கள், உபகரணங்களை விநியோகிப்பதில் பங்காற்றுகின்றன என அமெரிக்க புலனாய்வு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. போதைப்பொருள் வர்த்தகத்தில் கிடைக்கும் வருவாய், எல்லை தாண்டி குற்றவாளிகளுக்கும் தீவிரவாதக் குழுக்களுக்கும் நிதி ஆதாரமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.