ஆசியக் கோப்பை இந்தியா–பாகிஸ்தான் போட்டியில் கைகுலுக்கல் சர்ச்சையை ஏற்படுத்திய ஆட்ட நடுவரும் ஜிம்பாப்வே முன்னாள் வீரருமான ஆண்டி பைகிராஃப்ட், பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா மற்றும் அணியின் மேலாளரிடம் மன்னிப்புக் கேட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.
சமீபத்திய யுஏஇக்கு எதிரான ஆட்டத்தில், பாகிஸ்தான் அணியின் மைதான பிரவேசம் தாமதமானது. இதற்குக் காரணம் பைகிராஃப்டை நீக்க வேண்டும் என்ற பாகிஸ்தானின் கோரிக்கையை ஐசிசி ஏற்க மறுத்ததே எனவும் பிசிபி குற்றம்சாட்டியது. இதனால் போட்டி துவக்கம் ஒரு மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் தனிப்பட்ட சந்திப்பில், பைகிராஃப்ட் பாகிஸ்தான் கேப்டன் மற்றும் மேனேஜரிடம் மன்னிப்பு கேட்டதாகவும், “செப்டம்பர் 14 அன்று ஏற்பட்ட சம்பவம் தவறான தொடர்பு காரணமாக நடந்தது” என்று அவர் விளக்கம் அளித்ததாகவும் பிசிபி தெரிவித்துள்ளது.
மேலும், இந்தியா–பாகிஸ்தான் டாஸ் நிகழ்ச்சியின் போது இரு அணிகளின் கேப்டன்கள் கைகுலுக்குவதைத் தடுத்தது பைகிராஃப்ட்தான் என பிசிபி குற்றம்சாட்டியுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் மீது கண்டனம் தெரிவித்த பிசிபிக்கு பதிலளிப்பதாகவே பைகிராஃப்ட் மன்னிப்பு கேட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதோடு, பைகிராஃப்ட் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா மற்றும் பயிற்சியாளர் ஹெசனுடனும் உரையாடிய வீடியோவையும் பிசிபி தனது சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளது.