பிஹாரில் வேலை இல்லாத பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவி – முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு
பிஹாரில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், வேலைவாய்ப்பு இல்லாத பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.
நவம்பரில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தீவிரமாகத் தயாராகிக் கொண்டிருக்கின்றன. வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் விவகாரம் சூடுபிடித்துள்ள இந்த நேரத்தில், ஆட்சியைத் தக்கவைக்க நிதிஷ் குமார் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார்.
ஏற்கனவே, பெண்கள் தொழில் தொடங்க ரூ.2 லட்சம் நிதி உதவி, மாணவர்களுக்கு வட்டியில்லா கல்விக் கடன் போன்ற திட்டங்களை அறிமுகப்படுத்தியிருந்தார். தற்போது, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட அவர், “முதல்வரின் நிச்சயம் சுயம் சகாயத் பட்டா யோஜனா விரிவுபடுத்தப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றும் உயர் கல்வி தொடர இயலாத இளைஞர்களுக்கே இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் தற்போது கலை, அறிவியல், வணிகப் பிரிவுகளில் பட்டம் பெற்ற வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கும் இந்த நன்மை வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தின் கீழ், 20 முதல் 25 வயதுக்குட்பட்ட ஆண் மற்றும் பெண் பட்டதாரிகள், அதிகபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகையைப் பெறுவர். இது வேலை இல்லாத இளைஞர்களுக்கு பெரிய துணையாக இருக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.