புதுச்சேரியில் தொழில் தொடங்க அனுமதி தாமதம் – இனி காலவரம்பை மீறினால் அபராதம் விதிக்கப்படும்

புதுச்சேரியில் தொழில்களைத் தொடங்க தடையில்லா ஆணையை நிர்ணயிக்கப்பட்ட காலவரம்புக்குள் வழங்க தவறினால், அந்தந்த அரசுத் துறைகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

முன்னர், புதுச்சேரியில் தொழில்களுக்கு மத்திய அரசு பெருமளவு சலுகைகள் அளித்ததால் பல நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. ஆனால், அந்த சலுகைகள் படிப்படியாக நீக்கப்பட்டதால் புதிய முதலீடுகள் குறைந்து விட்டன. மேலும், தொழில் தொடங்க பல்வேறு துறைகளில் அனுமதி பெற வேண்டியிருப்பதால், காலதாமதம் அதிகமாகி முதலீட்டாளர்கள் தயக்கமடைந்தனர். இதை சமாளிக்க ஒற்றைச் சாளர முறை அறிமுகப்படுத்தப்பட்டாலும், கோப்புகள் விரைவாக முன்னேறவில்லை.

இதையடுத்து, “வணிகம் செய்ய எளிமை” நோக்கில் அனுமதி வழங்கும் துறைகளுக்கு காலவரம்பு நிர்ணயிக்கும் சட்ட மசோதாவை புதுவை அரசு கொண்டு வந்தது. மத்திய அரசு அத்திட்டத்திற்கு அனுமதி அளித்த நிலையில், தொழில் துறை அமைச்சர் நமச்சிவாயம் சட்டசபையில் மசோதாவை தாக்கல் செய்தார்.

மசோதாவின் முக்கிய அம்சங்கள்:

  • தொழில், மின்சாரம், உள்ளாட்சி, சுற்றுச்சூழல், வருவாய், உணவு பாதுகாப்பு போன்ற துறைகள் தடையில்லா ஆணையை 5 முதல் அதிகபட்சம் 21 நாட்களில் வழங்க வேண்டும்.
  • அந்த காலவரம்பை மீறினால் சட்டப் பிரிவு 8(1)ன் படி அபராதம் விதிக்கப்படும்.
  • நகராட்சி மற்றும் கிராம, கொம்யூன் பஞ்சாயத்துகள் வழங்கும் வர்த்தக உரிமம் 5 ஆண்டுகள் செல்லுபடியாகும்; கள ஆய்வு தேவையில்லை.
  • தொழில் முனைவோருக்கு நிலப் பயன்பாட்டு உரிமம் எளிமையாக வழங்கப்படும்.
  • குடியிருப்பு, வணிக, வேளாண்மை மண்டலங்களில் குறு, சிறு, நடுத்தர தொழில்கள் தனியே நிலப் பயன்பாட்டை மாற்றாமல் தொடங்கலாம்.
  • தொழிலாளர் குடியிருப்புகள் தொழில் மண்டலங்களில், எஸ்டேட்டுகளில் அனுமதி இன்றி அமைக்கலாம்.
  • தொழில்கள் அமைக்க குறைந்தபட்ச சாலை அகலம் 5 மீட்டரிலிருந்து 4.5 மீட்டராக குறைக்கப்படும்.
  • அனைத்து கட்டிட அனுமதி மற்றும் இருப்புச் சான்றிதழ் ஆன்லைனில் வழங்கப்படும்.
  • 6 குடியிருப்பு யூனிட்டுகள், 500 ச.மீ. வரை வணிக அல்லது தொழில் கட்டிடங்களுக்கு இருப்புச் சான்றிதழ் தேவையில்லை.
  • பெண்கள் இரவு நேரங்களில் தொழிற்சாலைகள், கடைகள், வணிக நிறுவனங்களில் பணியாற்ற அனுமதி.
  • 50 பணியாளர்களுக்கு கீழ் உள்ள கடைகள், நிறுவனங்களுக்கு புதுச்சேரி கடைகள் சட்டம் 1964-ல் இருந்து விலக்கு.
  • தீ பாதுகாப்பு சான்றிதழ் செல்லுபடியாகும் காலம் 1 ஆண்டிலிருந்து 3 ஆண்டுகள் வரை நீட்டிப்பு.
  • மின்சாரம், நீர் இணைப்புக்கு ஆன்லைன் விண்ணப்பம் மற்றும் நேரடி கண்காணிப்பு.
  • குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கு 3 ஆண்டுகள் குறிப்பிட்ட அனுமதி மற்றும் ஆய்விலிருந்து விலக்கு.

இந்த மசோதா சட்டசபையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டதாக பேரவைத்தலைவர் செல்வம் அறிவித்தார்.

Facebook Comments Box