மேற்கு வங்கத்தில் 2011 முதல் 840 ஆயுள் கைதிகள் விடுதலை – மம்தா பானர்ஜி தகவல்

மேற்கு வங்கத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் இதுவரை மொத்தம் 840 ஆயுள் தண்டனை கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “சிறைகளில் 14 ஆண்டுகள் மேலாக தண்டனை அனுபவித்து, நன்னடத்தை காட்டி வரும் ஆயுள் கைதிகள் கட்டுப்படுத்தப்பட்ட சட்ட நடைமுறைகளின் பேரில் விடுதலை செய்யப்படுகின்றனர். அந்த வகையில், 2011 முதல் இதுவரை 840 கைதிகள் சுதந்திரம் பெற்றுள்ளனர்” என்றார்.

மேலும், விரைவில் மற்ற 45 ஆயுள் கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர் என்றும், அதற்கான சட்ட நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார். “விடுதலை பெறும் கைதிகள் நல்ல குடிமக்களாக வாழ்ந்து, குடும்பத்தோடு புதிய வாழ்வை தொடங்க வேண்டும்” என வாழ்த்தும் செய்தியையும் அவர் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கையை மனித உரிமை அமைப்புகள் பாராட்டியுள்ளன. அதே நேரத்தில், புரூலியா மாவோயிஸ்ட் வழக்கில் 23 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் நாராயண் மஹதோ மற்றும் மேலும் 4 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என அவை கோரிக்கை விடுத்துள்ளன.

Facebook Comments Box