“பாலஸ்தீனத்தில் நடப்பது திட்டமிடப்பட்ட இனப்படுகொலை” – இயக்குநர் வெற்றிமாறன்

பாலஸ்தீனத்தில் நடந்து வருவது நூறு ஆண்டுகளாக திட்டமிடப்பட்ட ஒரு இனப்படுகொலை என்று இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்தார்.

காசாவில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் பேரணி நடைபெற்றது. இதில் நடிகர்கள் சத்யராஜ், பிரகாஷ்ராஜ், இயக்குநர் வெற்றிமாறன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது:

“எங்கெல்லாம் மக்கள் ஒடுக்கப்படுகிறார்களோ, எங்கெல்லாம் மக்கள் ஒடுக்குமுறையால் கொல்லப்படுகிறார்களோ, அங்கெல்லாம் அவர்களுக்கு ஆதரவாக நிற்பதுதான் ஒரு கலைஞனாக, ஒரு மனிதனாக நம் அனைவரின் கடமை என்று நான் நினைக்கிறேன். பாலஸ்தீனத்தில் நடந்து வருவது நூறு ஆண்டுகளாக திட்டமிடப்பட்ட ஒரு இனப்படுகொலை. அங்குள்ள மக்கள் மருத்துவமனைகளிலும், பள்ளிகளிலும் அடைக்கலம் புகுந்துள்ளனர் என்பது தெரிந்தும் அவர்களின் மீது குண்டுகளை வீசுகின்றனர்.

நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக அவர்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கக் கூடிய ஆலிவ் மரங்களை பல நூறு ஏக்கர்களில் அழித்துவிட்டனர். இப்போது இதனை மிகவும் தீவிரமாக செய்து வருகின்றனர். இன்று காசா பஞ்சப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சப் பகுதி என்றால் ஐந்தில் ஒருவர் பசியால் சாவதும், ஐந்தில் ஒரு குழந்தை ஊட்டச்சத்து குறைபாட்டால் இறப்பதும்தான் பஞ்சப் பகுதி என்று அறிவிக்கப்படும்.

இந்த திட்டமிட்ட இனப்படுகொலையை கண்டிக்க வேண்டியது நமது கடமை. மாற்றம் என்பது உடனே நடந்து விடாது. ஆனாலும் நமது எதிர்ப்பை பதிவு செய்யவேண்டும்” இவ்வாறு வெற்றிமாறன் தெரிவித்தார்.

Facebook Comments Box