ஆகம கோயில்களை கண்டறியும் குழுவில் கோவிலூர் மடாதிபதி: உச்ச நீதிமன்ற பரிந்துரை

ஆகம கோயில்களைக் கண்டறியும் குழுவின் உறுப்பினராக காரைக்குடி கோவிலூர் மடாலய மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ நாராயண ஞான தேசிக சுவாமிகளை நியமிக்க பரிந்துரைத்துள்ளது உச்ச நீதிமன்றம்.

அகில இந்திய சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் உள்ளிட்டவை சார்பில், ஆகம விதிகளைப் பின்பற்றும் கோயில்களில் அர்ச்சகர்கள் நியமனத்தில் ஆகமத்தை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

ஏற்கெனவே இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்தில் ஆகம விதிகள் பின்பற்றப்படும் கோயில்கள், பின்பற்றப்படாத கோயில்களை கண்டறிய சென்னை உயர் நீதிமன்றம் அமைத்த குழுவுக்கு 3 மாத அவகாசம் வழங்கியது. மேலும், ஆகமம் அற்ற கோயில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக நியமிக்கலாம் என உத்தரவிட்டது.

இதற்கிடையில், குழுவில் இடம்பெற்ற ஜெ. முருகவேலின் நியமனத்தை ரத்து செய்ய அகில இந்திய சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் இடையீட்டு மனு தாக்கல் செய்தது.

நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கிய உத்தரவில், ‘‘ஜெ. முருகவேலின் நியமனத்திற்கு மனுதாரர் மட்டுமின்றி குழு தலைவரும் ஆட்சேபம் தெரிவித்ததால், அவரது நியமனத்தை நிராகரிக்கிறோம்.

அதற்குப் பதிலாக, குழுவின் உறுப்பினராக காரைக்குடி கோவிலூர் மடாலய மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ நாராயண ஞான தேசிக சுவாமிகளை நியமிக்க தமிழக அரசுக்கு பரிந்துரைக்கிறோம்’’ என தெரிவித்துள்ளது.

Facebook Comments Box