அக்சர் படேல் களத்தில் காயம் – பாகிஸ்தான் போட்டியில் பங்கேற்பாரா?

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நாளை (செப்.21) மோதவுள்ளன. இது, இத்தொடரில் இரு அணிகளுக்கிடையேயான இரண்டாவது ஆட்டமாகும்.

இந்த நிலையில், இந்திய ஆல்ரவுண்டர் அக்சர் படேல் விளையாடுவாரா என்பது சந்தேகமாகியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ஓமன் அணியுடன் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பீல்டிங் செய்யும்போது அவர் தலையில் காயமடைந்தார். இதையடுத்து அவர் மைதானத்தை விட்டு பெவிலியனுக்குத் திரும்பினார்.

அந்த ஆட்டத்தில் அக்சர் ஒரு ஓவர் மட்டுமே வீசி 4 ரன்கள் விட்டார். அதோடு, 13 பந்துகளில் 26 ரன்கள் குவித்தார். மிடில் ஆர்டரில் நம்பிக்கை தரும் பேட்ஸ்மேன் மற்றும் மூன்றாவது ஸ்பின்னராகவும் விளங்கும் அக்சர், பீல்டிங்கிலும் திறமையானவர்.

இந்நிலையில், அவர் இல்லையெனில் துபாய் பீல்டு சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானதால், வருண் மற்றும் குல்தீப்பை தவிர இந்தியா மூன்றாவது ஸ்பின்னரை யார் எனத் தேர்வு செய்யும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

குறிப்பாக, பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் அக்சர் 4 ஓவரில் 18 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்ததுடன், ஒரு கேட்ச்சையும் பிடித்தார்.

“இப்போதுதான் அக்சரை பார்த்தேன். அவர் தற்போது நலமாக உள்ளார். பாகிஸ்தான் ஆட்டத்திற்கான எங்கள் தயாரிப்பு நடைபெற்று வருகிறது” என்று இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் டி.திலீப் தெரிவித்துள்ளார்.

Facebook Comments Box