‘மோடிக்கு ட்ரம்ப் தரும் பரிசுகள்…’ – எச்1பி விசா கட்டண உயர்வை முன்னிட்டு காங்கிரஸ் குற்றச்சாட்டு

“பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த பின்னர், அமெரிக்கா தரும் ‘பரிசுகள்’ இந்தியர்களுக்கு துயரத்தை ஏற்படுத்தியுள்ளன” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எச்1பி விசா பிரச்சினையை சுட்டிக்காட்டி கடுமையாக தாக்கினார்.

அவர் எக்ஸில் வெளியிட்ட பதிவில், “மோடியின் பிறந்தநாளில் ட்ரம்ப் தெரிவித்த வாழ்த்துகளுக்குப் பின், கிடைத்த பரிசுகள் இந்தியர்களுக்கு வேதனை அளிக்கின்றன. ‘ஆப்கி பார், ட்ரம்ப் சர்க்கார்’ ஆட்சியிலிருந்து வரும் பிறந்தநாள் பரிசுகள் எவை தெரியுமா? – எச்1பி விசா ஆண்டுக்கான கட்டணம் 1 லட்சம் டாலராக உயர்த்தப்பட்டுள்ளது. இது இந்திய தகவல் தொழில்நுட்ப ஊழியர்களுக்கு பெரிய அதிர்ச்சியை தரும். ஏனெனில், இந்த விசா வைத்திருப்பவர்களில் 70%க்கும் மேற்பட்டோர் இந்தியர்களே” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், “ஏற்கெனவே அமெரிக்கா விதித்த 50% வரியால் 10 துறைகளில் மட்டும் இந்தியாவுக்கு ரூ.2.17 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ‘ஹையர்’ சட்டம், சபாஹர் துறைமுக விலக்கு நீக்கம் ஆகியவை இந்தியாவுக்கு பாதகமானவை. அதோடு, இந்தியப் பொருட்களுக்கு 100% வரி விதிக்க ஐரோப்பிய ஒன்றியத்தை ட்ரம்ப் அழுத்தி வருகிறார். சமீபத்தில் கூட, இந்தியா – பாகிஸ்தான் போரை தானே நிறுத்தியதாக அவர் கூறியிருப்பது, வெளியுறவுக் கொள்கையில் இந்தியாவின் நிலையை பாதிக்கிறது. வெளியுறவு என்பது வெறும் அரவணைப்பு, கோஷம், இசை நிகழ்ச்சிகள் அல்ல; அது தேசிய நலன்களை காக்கும் வலுவான தந்திரம் ஆகும்” என்றார்.

இதற்கிடையில், “இந்தியாவுக்கு பலவீனமான பிரதமர் உள்ளார் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்” என்று ராகுல் காந்தி தாக்குதல் நடத்தினார். அதேபோல், மணீஷ் திவாரி, “அமெரிக்கா திட்டமிட்டு இந்தியாவை சுரண்டுகிறது. இது இரு நாடுகளின் உறவுக்கு நல்லதல்ல” என்று கூறினார்.

மற்றொரு காங்கிரஸ் தலைவரான பவன் கேரா, “இது புதிதல்ல. 2017 ஜூலை 5 அன்று ராகுல் காந்தி ட்வீட்டில் இதை முன்னறிவித்திருந்தார். பிரதமர் மோடியை எச்சரித்தும், அவர் எதுவும் செய்யவில்லை. இன்று கூட அவர் பலவீனமான பிரதமராகவே உள்ளார். இதனால் கோடிக்கணக்கான இளைஞர்கள் பாதிக்கப்படுகின்றனர். ட்ரம்ப் தினமும் இந்தியாவை அவமதிக்கிறார். ஆனால் பிரதமர் மௌனமாக இருக்கிறார்” என்று விமர்சித்தார்.

எச்1பி விசா உயர்வு – இந்தியர்களுக்கு என்ன விளைவு?

அமெரிக்காவில் தற்காலிகமாக பணியாற்றும் திறமைசாலிகளுக்காக வழங்கப்படும் எச்1பி விசாவின் ஆண்டு அளவு 85,000. இதன் கீழ் ஆய்வாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் அமெரிக்க உயர்கல்வி நிறுவனங்களில் படித்த மாணவர்களும் பயன்பெறுகின்றனர். தற்போது சுமார் 7.5 லட்சம் பேர் அமெரிக்காவில் இந்த விசாவை கொண்டு பணிபுரிகின்றனர்; அவர்களுடன் சேர்ந்து 13.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அங்கே வசித்து வருகின்றனர். இவர்களில் 71%க்கும் மேற்பட்டோர் இந்தியர்களே.

இப்போதைய கட்டணம் ரூ.1.32 லட்சம். ஆனால், ட்ரம்ப் கையொப்பமிட்ட புதிய உத்தரவு படி, இந்த கட்டணம் செப்டம்பர் 21 முதல் ஆண்டுக்கு ரூ.88 லட்சமாக உயரும். இதனால் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று அச்சம் நிலவுகிறது.

Facebook Comments Box