ஹெரிடேஜ் பங்கு விலை உயர்வால் சந்திரபாபு மனைவியின் சொத்து ரூ.121 கோடி உயர்வு
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மனைவியின் சொத்து மதிப்பு, ஹெரிடேஜ் புட்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை உயர்வால் ஒரே நாளில் ரூ.121 கோடியாக உயர்ந்தது.
சந்திரபாபு நாயுடு குடும்பத்திற்கு சொந்தமான ஹெரிடேஜ் புட்ஸ் நிறுவனம் ஹைதராபாதில் தலைமையகம் வைத்து செயல்படுகிறது. தென்னிந்தியாவின் முன்னணி பால் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக இது திகழ்கிறது. பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.5 ஆயிரம் கோடி ஆகும். புவனேஸ்வரி நாரா வசம் 2.26 கோடி பங்குகள் (24.37%) வைத்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை வர்த்தகத்தில், ஹெரிடேஜ் பங்கின் விலை ஒரு பங்கு ரூ.485-ல் இருந்து வர்த்தகத்தின் இடையே ரூ.541.60 வரை உயர்ந்தது; இறுதியில் ரூ.527-ல் முடிவடைந்தது. இதனால் புவனேஸ்வரியின் சொத்து மதிப்பு ஒரே நாளில் ரூ.121 கோடியாக அதிகரித்தது.
நிறுவனம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் விலங்குகளுக்கான உணவுப்பொருள் உற்பத்தியிலும் ஈடுபட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ஹெரிடேஜ் நிறுவனத்தின் வருவாய் ரூ.1,136.8 கோடியாக உயர்ந்தது; இதன் மூலம் தொடர்ச்சியாக 3-வது காலாண்டாக இரட்டை இலக்க வளர்ச்சி பெற்றுள்ளது.