மகாளய அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடலில் பக்தர்கள் புனித நீராடல்

மகாளய அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை புனித நீராடினர்.

புரட்டாசி பவுர்ணமி மறுநாள் தொடங்கி அமாவாசை வரை நீடிக்கும் மகாளய காலம், முன்னோர்களுக்கான தர்ப்பணங்கள் மற்றும் பித்ரு தர்மங்களுக்குப் பிரசித்தி பெற்றது. அமாவாசை தினத்தில் தர்ப்பணம் செய்வதால் முன்னோர்களின் ஆசீர்வாதத்துடன் நல்ல துணை, கல்வி, குழந்தைகள், வீடு, நிலம், தொழில் வளர்ச்சி, ஆரோக்கியம், தீர்க்காயுள் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

தமிழகம் மட்டுமின்றி கர்நாடகம், கேரளம், ஆந்திரா, தெலங்கானா போன்ற மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் ராமேசுவரம் வந்தனர். அதிகாலை ராமநாதசுவாமி கோயிலில் ஸ்படிக லிங்க பூஜை, சாயரட்சை பூஜை உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர் பக்தர்கள் அக்னி தீர்த்தக் கடலில் நீராடி, கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடி ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி தாயார் ஆகியோரைக் கண்டு தரிசனம் செய்தனர்.

மதியம் 12 மணியளவில் அக்னி தீர்த்தக் கடற்கரையில் ஸ்ரீராமர், சீதா, லட்சுமணர் தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி வழங்கி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இன்று இரவு ராமநாதசுவாமி கோயிலில் நவராத்திரி திருவிழாவின் காப்புக்கட்டும் நிகழ்வு நடைபெற உள்ளது.

பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் 150-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளை இயக்கியது. மேலும், பல்வேறு சத்திரங்களில் அன்னதானம் நடைபெற்று பக்தர்கள் பயன்பெற்றனர்.

Facebook Comments Box