ஈரானில் இந்தியர்களை கடத்தி பணம் பறிக்கும் கும்பல்: மத்திய அரசின் எச்சரிக்கை

ஈரானில் வேலைக்காகச் செல்லும் இந்தியர்களை அந்நாட்டு ஆள் கடத்தல் கும்பல்கள் பிடித்து வைத்து, பின்னர் அவர்களை விடுவிக்க குடும்பத்தாரிடம் பெரும் தொகை கேட்டு மிரட்டுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவுறுத்தலில், “அனைத்து இந்திய குடிமக்களும் வேலைவாய்ப்பு வாக்குறுதிகள் மற்றும் சலுகைகள் குறித்து மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். குறிப்பாக, ஈரான் அரசு சுற்றுலா பயணிகளுக்கே விசா இல்லாத அனுமதியை வழங்குகிறது. சுற்றுலாவைத் தவிர்ந்த வர்த்தகம், வேலை போன்ற காரணங்களுக்கு கண்டிப்பாக விசா அவசியம். எனவே, விசா பெற்று தருவதாக கூறும் முகவர்கள் குற்றக் கும்பல்களுடன் தொடர்பு கொண்டிருக்கலாம். இந்தியர்கள் ஏமாற்றத்தில் சிக்கி விடாமல் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்” என்று எச்சரித்துள்ளது.

இதற்கிடையில், டெல்லி நரேலாவைச் சேர்ந்த 26 வயது இளைஞர் ஹிமான்ஷு மாத்தூர், ஈரானில் கடத்தப்பட்டு சித்ரவதை செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மாத்தூரிடம், அமன் ரதி என்ற நபர் ஆஸ்திரேலிய விசாவில் கப்பலில் வேலை எளிதில் கிடைக்கும் என்று கூறி ஆசை காட்டியுள்ளார். அதற்காக, மாத்தூர் உத்தரப் பிரதேச நொய்டாவின் ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் கப்பல் துறையில் டிப்ளமா முடித்தார்.

பின்னர் தனது சகோதரர் மூலம் ரூ.12 லட்சம் செலுத்தி ரதியுடன் சேர்ந்து ஈரானுக்கு பயணம் செய்தார். அங்கு சபாஹாரில் அவர்கள் ஏஜென்டின் தொடர்புடைய கும்பலால் கடத்தப்பட்டனர். குடும்பத்தாரிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய நிலையில், பேச்சுவார்த்தைக்கு பின் ரூ.20 லட்சம் அளித்த பின் மட்டுமே அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இந்தியா திரும்பிய பிறகு, மாத்தூர் மற்றும் ரதி இருவரும் செப்டம்பர் 7-ம் தேதி டெல்லி போலீசில் புகார் அளித்துள்ளனர்.

Facebook Comments Box