எச்1பி விசா கட்டணம் ஒருமுறை மட்டுமே: ட்ரம்பின் புதிய உத்தரவை அமெரிக்க அரசு தெளிவுபடுத்தியது
அமெரிக்காவில் பணியாற்ற தற்காலிகமாக வழங்கப்படும் எச்1பி விசாவுக்கான கட்டணத்தை ஆண்டுதோறும் செலுத்த வேண்டிய அவசியமில்லை; இது ஒருமுறை மட்டுமே செலுத்தப்பட வேண்டும் என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
சமீபத்தில், எச்1பி விசா கட்டணம் ரூ.1.32 லட்சத்திலிருந்து திடீரென ரூ.88 லட்சமாக உயர்த்தப்பட்டது. புதிய கட்டண நடைமுறை செப்டம்பர் 21 முதல் அமலுக்கு வந்தது. ஆனால், முதல் நாளில் இதுகுறித்து தெளிவான விளக்கம் அளிக்கப்படாததால், மெட்டா, மைக்ரோசாப்ட் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்கள், தாய்நாட்டுக்கு சென்றிருந்த ஊழியர்களை அவசரமாக அமெரிக்காவுக்கு திரும்புமாறு அறிவுறுத்தின.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் மாளிகை ஊடகச் செயலாளர் கரோலின் லீவிட் விளக்கம் அளித்துள்ளார். அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியதாவது:
“ஏற்கனவே எச்1பி விசா பெற்றவர்கள் புதிய கட்டணத்தை செலுத்த தேவையில்லை. இது ஒருமுறை கட்டணம் மட்டுமே. தாய்நாட்டுக்கு சென்று மீண்டும் அமெரிக்காவிற்கு திரும்பும் வெளிநாட்டு ஊழியர்களுக்கும் கூட இந்த கட்டண உயர்வு பொருந்தாது. புதிதாக எச்1பி விசா பெற விண்ணப்பிக்கும் நபர்களுக்கே உயர்ந்த கட்டணம் விதிக்கப்படும். தற்போதைய எச்1பி விசாவை பழைய கட்டண விகிதத்திலேயே புதுப்பிக்கலாம்.”
அதேவேளை, அமெரிக்க அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாவது:
“தாய்நாட்டில் உள்ள எச்1பி விசாதாரர்கள் உடனடியாக திரும்ப வேண்டிய அவசியமில்லை; அவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை துறை சார்பில் அதிகாரிகளுக்கு உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது. அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ள புதிய ஆணை, புதிதாக எச்1பி விசா கோருபவர்களுக்கே பொருந்தும். அதனை அதிகாரிகள் கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும்.”