ஜிஎஸ்டி 2.0 இன்று முதல் அமல்: வரி குறைப்பால் பொருளாதாரம் வளர்ச்சி அடையும் – பிரதமர் மோடி
நாடு முழுவதும் இன்று ஜிஎஸ்டி வரி குறைப்பு அமலுக்கு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி இதனால் நாட்டின் பொருளாதாரம் அபரிமிதமாக வளர்ச்சி அடைவதாக தெரிவித்தார்.
ஜிஎஸ்டி 2.0 இன்று முதல் செயல்படுகிறது. இதையொட்டி பிரதமர் நேற்று மாலை 5 மணிக்கு மக்களிடம் உரையாற்றினார். அவர் கூறியதாவது:
“நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய நவராத்திரி வாழ்த்துகள். நவராத்திரி பண்டிகை தொடங்கும் இந்நாளில், சுயசார்பு இந்தியா இயக்கத்தின் மிக முக்கிய மாற்றமான ஜிஎஸ்டி 2.0 அமலுக்கு வருகிறது. இதனால் கோடிக்கணக்கான குடும்பங்களில் சேமிப்பு திருவிழா தொடங்கும்; மக்கள் விரும்பிய பொருட்களை வாங்க முடியும், ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சி பொங்கும்.
புதிய வரி விகிதங்கள் ஏழை, நடுத்தர மக்கள், விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள், வணிகர்கள் என அனைத்து தரப்பினருக்கும் பயனளிக்கும். இதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் அபரிமிதமாக வளர்ச்சி அடையும். முன்பு சேவை வரி, வாட், கலால் வரி, விற்பனை வரி, நுழைவு வரி போன்ற பல வரிகள் விதிக்கப்பட்டிருந்தது.
2014-ல் பிரதமராக பதவியேற்ற பிறகு, அனைத்து மாநிலங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி, ‘ஒரே நாடு, ஒரே வரி’ என்ற கனவு திட்டத்தை செயல்படுத்தினோம். 2017-ல் ஜிஎஸ்டி வரி நடைமுறைக்கு வந்தது. ஆனால், சீர்திருத்தம் தொடர்ச்சியாக வேண்டும் என்பதற்காக தற்போது ஜிஎஸ்டி 2.0 அறிமுகம் செய்யப்படுகிறது. இனிமேல் 5% மற்றும் 18% என்ற இரண்டு வரி அடுக்குகள் மட்டுமே அமலும். 12% அடுக்கில் இருந்த 99% பொருட்கள் தற்போது 5% அடுக்கில் வருவதைத் தவிர, அத்தியாவசியப் பொருட்கள் முழுமையான விலக்கு பெற்றுள்ளன. இதனால், உணவுப் பொருட்கள், வீடு கட்டுதல், புதிய டிவி, ஃபிரிட்ஜ், வாகனங்கள் வாங்குதல் எளிதாகும்; போக்குவரத்து செலவு, ஓட்டல் வாடகை குறையும்.
ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் காரணமாக முதலீடுகள் அதிகரிக்கும், வர்த்தகம் விரிவடையும். குறு, சிறு தொழில்கள் பெரும் பலன் பெறும்; விற்பனை அதிகரிக்கும். நமது உற்பத்திகள் உலக தரத்துக்கு இணங்க வேண்டும்; இது சர்வதேச அரங்கில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தும்.
வரும் 2047-ம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க சுயசார்புடன் செயல்பட வேண்டும். ஒவ்வொரு பொருளையும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்து, வெளிநாட்டு பொருட்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு கடையிலும் ‘சுதேசி பொருட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது’ என்ற அறிவிப்பை வைக்க வேண்டும்.
மாநிலங்களும் இணைந்து, சுதேசி இந்தியா இயக்கத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டும்; ஒவ்வொரு மாநிலமும் வளர்ச்சி அடையும்போது, இந்தியா முழுவதும் வளர்ச்சி அடையும் என்று பிரதமர் மோடி உரையாற்றினார்.