82-வது வருடத்தில் ‘காரைக்கால் அம்மையார்’!
அறுபத்து மூன்று நாயன்மார்களில், மூன்று பேர் பெண்கள். அவர்களில் மூத்தவர், காரைக்கால் அம்மையார். சிறந்த சிவபக்தரான அவரைப் பற்றிய புராணக்கதையை மையப்படுத்தி உருவான படம், ‘காரைக்கால் அம்மையார்’. சி.வி.ராமன் தனது கந்தன் கம்பெனி சார்பில் தயாரித்து இயக்கிய படம் இது. பாபநாசம் சிவன் இசை அமைத்தார்.
வி.ஏ.செல்லப்பா, பி.சரஸ்வதி, கே.சாரங்கபாணி, கே.ஆர்.செல்லம், காளி என்.ரத்தினம், டி.எஸ்.ஜெயா, ‘பேபி’ கல்யாணி, சாந்தா தேவி, டி.எஸ்.துரைராஜ், கொளத்து மணி, மாதவன், ராமையா சாஸ்திரி, குஞ்சிதபாதம் பிள்ளை என பலர் நடித்தனர்.
சிறுவயது முதல் சிவபெருமானின் தீவிர பக்தையாக இருந்த காரைக்கால் அம்மையார், நமச்சிவாய என்ற சிவ மந்திரத்தை உச்சரித்து, தன்னுடைய ஊருக்கு வரும் சிவ பக்தர்களைக் கவனித்துக் கொண்டார். இவரின் இயற்பெயர் புனிதவதி. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக நம்பப்படும் இவர், ஒரு பணக்கார வணிகரை மணந்தார். அவர் குடும்பத்தில் நடந்த ஒரு சம்பவம், தனது மனைவி தெய்வீக குணம் கொண்டவர் என்பதைக் கணவருக்கு உணர்த்துகிறது. அவர், மனைவியை ‘அம்மையார்’ என்று அழைக்கத் தொடங்கினார். அவரை இனி தனது மனைவியாக நடத்த முடியாததால், வேறொரு பெண்ணை மணந்துகொண்டார்.
இதையடுத்து, எந்த ஆணும் தன்னை ஆசையுடன் தேடாதபடி வேறு வடிவத்தை தனக்குக் கொடுக்கும்படி சிவபெருமானிடம் கேட்டார் காரைக்கால் அம்மையார். அவர் விருப்பம் நிறைவேற்றப்பட்டது. காளியின் வடிவமாக மாறிய அவரை, கைலாய மலைக்கு வந்து தன்னைச் சந்திக்கும்படி கேட்டார் சிவன். கைகளாலேயே அவள் மிகுந்த பக்தியுடன் அங்கு நடந்து சென்றார். இந்தக் கதைதான் படம்.
இதில் காரைக்கால் அம்மையாராக பி.சரஸ்வதி, அவர் கணவன் பரமதத்தனாக சாரங்கபாணி, சிவபெருமானாக வி.ஏ.செல்லப்பா நடித்தனர். டி.எஸ்.துரைராஜ், எம்.இ.மாதவன், குஞ்சிதபாதம் பிள்ளை ஆகியோர் நகைச்சுவை ஏரியாவை கவனித்துக் கொண்டனர். அப்போது பிரபலமாக இருந்த நடிகை டி.எஸ்.ஜெயா பார்வதியாக நடித்தார். இவர் 1937-ம் ஆண்டு முதல் 1956 வரை பாலாமணி, மணிமாலை, தமிழறியும் பெருமாள், லைலா மஜ்னு உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
அந்த காலகட்டத்தில் பிரபல நடன ஜோடிகளான எஸ்.நடராஜும் ஏ.ஆர்.சகுந்தலாவும் ‘சிவதாண்டவ’ நடனத்தில் பங்கேற்றனர். அந்த நடனம் அப்போது பேசப்பட்டது.
82 வருடங்களுக்கு முன், 1943-ம் ஆண்டு இதே நாளில் (செப்.22) வெளியான இந்தப் படத்தின் பாடல்கள், நடிப்பு அனைத்தும் நன்றாக இருந்தும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதே கதையை கொண்டு ஏ.பி.நாகராஜன் 1973-ல் வேறொரு படத்தை இயக்கினார். அதில் கே.பி.சுந்தராம்மாள், முத்துராமன், சிவகுமார், வித்யா, மனோரமா, லட்சுமி என பலர் நடித்தனர்.