எச்1பி விசா கட்டண உயர்வு… அமெரிக்காவுக்கு பின்னடைவு, இந்தியாவுக்கு ஆதாயமா?
எச்1பி விசா கட்டண உயர்வு என்ற ட்ரம்ப்பின் அதிரடி நடவடிக்கை மூலம் அமெரிக்காவுக்கு பல விதங்களில் பின்னடைவும், இந்தியாவுக்கு பல வழிகளில் நன்மைகளும் ஏற்படும் என்று வர்த்தக மற்றும் தொழில்நுட்ப துறை வல்லுநர்கள் கூறுகின்றனர். இது குறித்து சற்றே தெளிவாகப் பார்ப்போம்.
அமெரிக்காவில் தற்காலிகமாக பணியாற்றுவோருக்கு எச்1பி விசா வழங்கப்படுகிறது. ஆய்வாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளிட்ட சிறப்பு பணித் திறன்கொண்டவர்களுக்கு மட்டுமே இந்த விசா வழங்கப்படும். ஓராண்டில் 65 ஆயிரம் எச்1பி விசாக்களை அமெரிக்க அரசு விநியோகம் செய்கிறது. மேலும், அமெரிக்க உயர் கல்வி நிறுவனங்களில் படித்த வெளிநாட்டு மாணவர்களுக்கு 20,000 எச்1பி விசா வழங்கப்படுகிறது. இதன்படி, ஓராண்டில் மொத்தம் 85,000 எச்1பி விசாக்கள் வழங்கப்படுகின்றன.
எச்1பி விசா பெற்றவர்கள் அமெரிக்காவில் 3 ஆண்டுகள் வரை தங்கியிருந்து பணியாற்றலாம். தேவைப்பட்டால், மேலும் 3 ஆண்டுகள் வரை விசா காலத்தை நீட்டிக்க முடியும். சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, அமெரிக்காவில் எச்1பி விசாவில் சுமார் ஏழரை லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். அவர்களது மனைவி, பிள்ளைகள் என சுமார் ஆறு லட்சம் பேர் அமெரிக்காவில் வசிக்கின்றனர். ஒட்டுமொத்தமாக எச்1பி விசா அடிப்படையில் அமெரிக்கா முழுவதும் 13 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் தங்கி உள்ளனர். இந்த விசாவை பெற்றவர்களில் சுமார் 71 சதவீதம் பேர் இந்தியர்கள்.
இந்நிலையில்தான், ஒரு லட்சத்து 32 ஆயிரம் ரூபாயாக இருந்த எச்1பி விசா கட்டணத்தை 88 லட்சம் ரூபாயாக உயர்த்த வகை செய்யும் ஆணையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இந்த புதிய கட்டண நடைமுறை உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது.
புதிய கட்டண விதிகள் குறித்து முதல் நாளில் தெளிவான விளக்கம் அளிக்கப்படாததால், அமெரிக்காவின் மெட்டா, மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் தாய்நாட்டுக்கு சென்ற வெளிநாட்டு ஊழியர்களை உடனடியாக அமெரிக்காவுக்கு திரும்ப அறிவுறுத்தின. இதனால் விமான நிலையங்களில் கூட்டம் உருவானது. இதையடுத்து, அமெரிக்க அதிபர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, ‘இது ஒருமுறை கட்டணம் மட்டுமே. ஏற்கெனவே எச்1பி விசா பெற்றவர்கள் புதிய கட்டணத்தை செலுத்த தேவையில்லை.’
அதேபோல், வெளிநாட்டு ஊழியர்கள் தாய்நாட்டுக்கு சென்றுவிட்டு மீண்டும் அமெரிக்கா திரும்பினாலும் கட்டண உயர்வை செலுத்த தேவையில்லை. புதிதாக எச்1பி விசா கேட்டு விண்ணப்பிக்கும்பவர்கள் மட்டுமே கட்டண உயர்வு எதிர்கொள்வார்கள். தற்போதைய எச்1பி விசாவை பழைய கட்டண விகிதத்திலேயே புதுப்பிக்கலாம்.
அதேபோல், “தாய்நாட்டுக்கு சென்ற எச்1பி விசா தருநர்கள் உடனடியாக அமெரிக்கா திரும்ப வேண்டிய அவசியமில்லை. புதிய கட்டண உயர்வில் இருந்து அவர்களுக்கு விலக்கு உள்ளது” என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. எச்1பி விசா கட்டண உயர்வு என்பது அமெரிக்கர்களின் வேலை பறிபோவதை தடுக்க அவர் எடுத்த சரியான நடவடிக்கை என வெள்ளை மாளிகை கூறுகிறது.
கடந்த 2003-ம் ஆண்டில் இருந்து எச்1பி விசா பெறும் அமெரிக்க நிறுவனங்கள் இதுவரை பல்லாயிரக்கணக்கான அமெரிக்கர்களை பணி நீக்கம் செய்ததாக சில புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளன. வெள்ளை மாளிகை, ‘அமெரிக்காவில் அமெரிக்கர்களுக்கு கிடைக்க வேண்டிய பணிகளை மீட்டு கொண்டு வருவதுதான் ட்ரம்ப்பின் நோக்கம். அவர் பதவியேற்ற பிறகு, அனைத்து வேலை வாய்ப்புகளும் அமெரிக்காவில் பிறந்தவர்களுக்குதான் செல்கின்றன’ என்கிறது.
ஆனால், “எச்1பி விசா கட்டண உயர்வு அமெரிக்காவுக்கு பின்னடைவாக அமையும். முக்கிய துறைகளில் திறன் வாய்ந்தவர்களை அமெரிக்காவில் நுழைவதை கட்டணம் தடுக்கும். இதனால் இந்தியாவில் முக்கிய நகரங்களில் ஆய்வகங்கள், ஸ்டார்ட்-அப்கள், படைப்பாற்றல் திறன்களை மடைமாற்றும் வாய்ப்பு கூடும். இந்தியாவின் சிறந்த மருத்துவர்கள், பொறியாளர்கள், விஞ்ஞானிகள் நாட்டின் வளர்ச்சிக்கு பங்காற்றும் வாய்ப்பாக இது அமையும். பல நிறுவனங்கள் தங்கள் இயக்கத்தை இந்தியாவில் விரிவுபடுத்தும். அமெரிக்காவின் இழப்பு, இந்தியாவுக்கு ஆதாயம்” என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதேபோல், “எச்1பி விசா கட்டண உயர்வின் பாதிப்பை புதிய விண்ணப்பதாரர்கள் மட்டுமே எதிர்கொள்வார்கள். இதனால் விண்ணப்ப எண்ணிக்கை குறையும். யாரும் 1 லட்சம் டாலர் கட்டணத்தை செலுத்த போவதில்லை. இதுதான் நிதர்சனம். அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாடுகளில் தங்களது செயல்பாட்டை அதிகரிக்கும். அமெரிக்காவில் திறன் வாய்ந்தோர் குறைவாக கிடைக்கும்; விசா செலவும் அதிகரிக்கும். இதனால் இந்தியா உலக அளவிலான திறன் மையமாக மேம்படும்” என்றும் தொழில் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
“அதேபோல், ஏராளமான திறமையாளர்கள் தங்கள் பணி சார்ந்து இந்தியாவுக்கு திரும்பப் போகிறார்கள். தொடக்கத்தில் இடப்பெயர்வு கடினமாக இருக்கும், ஆனால் இந்தியாவில் வாய்ப்பு அற்புதமாக இருக்கும்” என எச்1பி விசா மூலம் அமெரிக்காவில் பணிபுரிந்துவிட்டு, பின்னர் இந்தியாவில் செட்டில் ஆன சிலர் கூறிய கருத்துகளும் கவனிக்கத்தக்கது.
எச்1பி விசா கட்டண உயர்வுக்கு அமெரிக்காவில் இயங்கி வரும் முன்னணி நிறுவனங்கள் பலவும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன. அமெரிக்க பொருளாதாரத்துக்கு வலுசேர்க்கும் திறமைவாய்ந்த ஊழியர்களை இழக்கும் அபாயம் உள்ளது. அமெரிக்காவின் தொழில்நுட்ப துறை சூழல் சரிவடையும் என்பதும் அவர்களது பார்வை. ஆகவே, எச்1பி விசா கட்டண உயர்வு நடவடிக்கை ட்ரம்புக்கு ‘பேக்ஃபயர்’ ஆகக் கூடும் என கருத்து வலுத்தப்பட்டுள்ளது.