பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் நவ.5 தொடங்கி 3 கட்டங்களாக நடைபெற வாய்ப்பு – தகவல்

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் நவம்பர் 5 முதல் 15 தேதிக்குள் 3 கட்டங்களாக நடைபெற வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

243 சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்ட பிஹார் சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் நவம்பர் 22-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. அதற்கு முன்பாக தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்பதே தேர்தல் ஆணையத்தின் கட்டாயம். கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர் 28 முதல் நவம்பர் 7 வரை 3 கட்டங்களாக நடைபெற்றது. அப்போது அக்டோபர் 28-ம் தேதி 71 தொகுதிகளிலும், நவம்பர் 3-ம் தேதி 94 தொகுதிகளிலும், நவம்பர் 7-ம் தேதி 78 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் நவம்பர் 10-ம் தேதி அறிவிக்கப்பட்டன.

அதேபோல், இம்முறையும் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. பிஹாரின் முக்கிய பண்டிகையான சாட் பூஜை அக்டோபர் 28-ம் தேதி வருகிறது. எனவே, அந்த பண்டிகைக்குப் பிறகு தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

பிஹாரில் தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அடுத்த வாரம் மாநிலத்திற்கு வர உள்ளார். மேலும், பிஹாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, அதன்படி மாநில இறுதி வாக்காளர் பட்டியல் செப்.30-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. எனவே, ஞானேஷ் குமாரின் பிஹார் பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

பொதுவாக, பிஹார் வாக்காளர் பட்டியலில் இருந்து 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பெயர் நீக்கப்பட்டவர்கள் தகுந்த ஆவணங்களை சமர்ப்பித்து மீண்டும் சேர்க்கலாம் என்று தேர்தல் ஆணையம் கால அவகாசம் வழங்கியுள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் போது, எவ்வளவு பேர் பெயர் நீக்கப்பட்டுள்ளனர் என்பதன் உண்மையான நிலை தெரிய வரும். பெயர் நீக்கத்தில் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டால், சிறப்பு தீவிர திருத்த நடைமுறை முழுமையாக ரத்து செய்யப்படும் என உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி vs இந்தியா கூட்டணி: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் இந்தியா கூட்டணியும் மீண்டும் நேரடி போட்டி எதிர்கொள்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜன்சக்தி கட்சி(ராம்விலாஸ்) உள்ளனர். முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் இக்கூட்டணி மீண்டும் தேர்தலை எதிர்கொள்கிறது. இந்தியா கூட்டணியில் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

கடந்த தேர்தலில் 243 தொகுதிகளில் பாஜக 80, ஐக்கிய ஜனதா தளம் 45, இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா(மதச்சார்பற்றது) 4 தொகுதிகளில் வெற்றி பெற்றன. தேர்தலுக்குப் பிறகு இரண்டு சுயேட்சைகள் கூட்டணியில் இணைந்தனர். இந்தியா கூட்டணி சார்பில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் 77 தொகுதிகளில், காங்கிரஸ் 19 தொகுதிகளில், சிபிஎம் 2 தொகுதிகள், சிபிஐ 2 தொகுதிகளில் வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments Box