கைபர் பக்துன்வாவில் பாகிஸ்தான் விமானப்படை குண்டுவீச்சு: 30 பொதுமக்கள் பலி

கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில், பாகிஸ்தான் விமானப்படை நடத்திய குண்டுவீச்சில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று அதிகாலை 2 மணியளவில், பஷ்துன் மக்கள் அதிகமாக வசிக்கும் மாட்ரே தாரா கிராமத்தில் பாகிஸ்தான் விமானப்படையின் ஜேஎஃப்-17 போர் விமானங்கள் எல்எஸ்-6 வகை 8 குண்டுகளை வீசி தாக்கின. இந்த தாக்குதலில் கிராமத்தின் பெரும்பகுதி சிதிலமடைந்தது. பலர் காயமடைந்ததோடு, பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 30 பேர் உயிரிழந்தனர்.

விமானப்படை, தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) அமைப்பின் மறைவிடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. எனினும், உயிரிழந்தவர்கள் அனைவரும் பொதுமக்கள் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில், ஆப்கானிஸ்தான் எல்லை பகுதிகளை ஒட்டிய கைபர் பக்துன்வாவில் பயங்கரவாதிகள் மீது ராணுவ நடவடிக்கைகளை பாகிஸ்தான் தீவிரப்படுத்தி வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை தேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் உளவுத்துறையினரின் தகவலின் அடிப்படையில் நடந்த தேடுதல் நடவடிக்கையில் ஏழு TTP பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அதேபோல், செப்டம்பர் 13 மற்றும் 14 தேதிகளில் கைபர் பக்துன்வா மாகாணத்தில் நடந்த இரண்டு தனித்தனி மோதல்களில் மொத்தம் 31 TTP பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.

Facebook Comments Box