பாகிஸ்தான் வீரர் ஃபர்ஹானின் துப்பாக்கிச் சூடு போஸ் சர்ச்சை – IND vs PAK
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் ‘சூப்பர் 4’ சுற்றில் இந்தியா – பாகிஸ்தான் மோதல் நடந்தது. இதில் பாகிஸ்தானின் சாஹிப்சாதா ஃபர்ஹான் அரைசதம் அடித்து அதனை கொண்டாடிய விதம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
துபாயில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. ஃபகார் ஸமான் – ஃபர்ஹான் இணைந்து இன்னிங்ஸ் தொடங்கினர். ஸமான் 15 ரன்களில் ஆட்டமிழந்தார்.
மறுபுறம் அதிரடியாக விளையாடிய ஃபர்ஹான், பும்ராவை சமாளித்து 35 பந்துகளில் அரைசதம் எட்டினார். 10வது ஓவரில் அக்சர் பந்தை சிக்ஸருக்கு விளாசி தனது அரைசதத்தை நிறைவு செய்தார். அப்போது வழக்கம்போல் பேட்டை உயர்த்தாமல், துப்பாக்கி சுடும் போஸ் காட்டினார். இதுவே பெரும் சர்ச்சையாகி உள்ளது. அவர் இறுதியில் 45 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார்.
இந்தியா – பாகிஸ்தான் எல்லைத் தகராறு, சமீபத்திய தீவிரவாதத் தாக்குதல்கள், ராணுவ நடவடிக்கைகள் போன்ற நெருக்கடி சூழ்நிலையில், ஃபர்ஹானின் ‘துப்பாக்கிச் சூடு’ போஸ் பலரால் விமர்சிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் வீரர்கள், பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்த சம்பவமும் நடந்தது. இப்படிப்பட்ட சூழலில் ஃபர்ஹானின் செயல் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.