தங்கம் விலை புதிய உச்சம்: ஒரே நாளில் பவுன் ரூ.1,120 உயர்வு
சென்னை: தங்கம் விலை இன்று (செப். 22) ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்து, ஒரு பவுன் ரூ.83,440-க்கு விற்பனையாகியுள்ளது.
தங்க விலை சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. அமெரிக்காவில் இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 50% வரி விதிப்பு, இந்திய ரூபாய் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால் தங்க விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
காலை நிலவரப்படி, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.70 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.10,360, பவுனுக்கு ரூ.82,880 விலை அடைந்தது. பிற்பகல் நிலவரப்படி மீண்டும் ரூ.70 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.10,430, பவுனுக்கு ரூ.83,440 விற்பனை ஆகி, ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,120 உயர்வு காணப்பட்டது.
வெள்ளி விலை இன்று குறைந்த அளவில் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.148, கிலோ ரூ.1,48,000 விற்பனை ஆகிறது.
இன்று நவராத்திரி பண்டிகையின் முதல் நாள். தீபாவளி வரையிலான பண்டிகை காலத்தில் தங்க விலை அதிகரிப்பது வழக்கம். நகை வியாபாரிகள் கூறுவதன்படி, இந்த ஆண்டு இறுதிக்குள் பவுன் தங்க விலை ரூ.1 லட்சத்தை தொட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.