டெல்லி கலவர வழக்கில் ஜாமீன் கோரி 5 பேர் உச்ச நீதிமன்றத்தில் மனு

2020-ல் டெல்லியில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு எதிர்ப்பு கலவரத்தில், 53 பேர் உயிரிழந்தது, 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வழக்கில் உமர் காலித், ஷர்ஜீல் இமாம், குல்பிஷா பாத்திமா, மீரான் ஹைதர், ஷிஃபா உர் ரஹ்மான் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்தோர் அனைவரும் ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். கடந்த 2-ம் தேதி டெல்லி உயர் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவர்கள் கலவரத்தில் முக்கிய பாத்திரம் வகித்ததாகக் குறிப்பிட்டு, ஜாமீன் கோரிக்கையை மறுத்தது. நீதிமன்றம் அரசு தரப்பின், “நடந்தது சாதாரண போராட்டம் அல்ல; நன்கு திட்டமிடப்பட்ட சதி” என்ற வாதத்தையும் ஆதரித்தது.

இதையடுத்து, உமர் காலித், ஷர்ஜீல் இமாம், குல்பிஷா பாத்திமா, மீரான் ஹைதர், ஷிஃபா உர் ரஹ்மான் ஆகிய 5 பேரும் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். உச்ச நீதிமன்றம் அரவிந்த் குமார், என்.வி. அஞ்சாரியா ஆகிய நீதிபதிகள் தலைமையிலான அமர்வில், மனுக்களுக்கு காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டது. வழக்கின் அடுத்த விசாரணையை அக்டோபர் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

உமர் காலித் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “அவர்கள் 5 ஆண்டுகளுக்கும் மேலாக காவலில் உள்ளனர். விசாரணை தேதியை தீபாவளிக்கு முன்பாக நிர்ணயிக்கவேண்டும்; அப்பொழுது அவர்கள் பண்டிகைக்கு முன்பாக வெளியே வர முடியும்” என வாதிட்டார்.

குல்பிஷா பாத்திமா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, “குல்பிஷா 5 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கிறார். அவர் ஒரு மாணவி. இடைக்கால ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்; அதற்கான நோட்டீஸ் பிறப்பிக்க வேண்டும்” என வலியுறுத்தினார். ஆனால் நீதிபதிகள் முன்கூட்டியே விசாரணை வாய்ப்பை மறுத்தனர்.

Facebook Comments Box