விண்வெளியில் தொடங்கும் போர்: ‘BODYGUARD SATELLITE-களை களமிறக்கும் இந்தியா!

புவி சார்பான அரசியலின் அடுத்த போர் களமாக விண்வெளி மாறி வருகிறது. இதில், விண்வெளி செயற்கைக்கோள் பாதுகாப்பை இந்தியா தீவிரமாக்கியுள்ளது. பாகிஸ்தான் மற்றும் சீனாவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள மெய்க்காப்பாளர் செயற்கைக்கோள்களை உருவாக்கி வருகிறது. அதற்கான ஒரு செய்தி தொகுப்பு.

1980-களில், அப்போதைய அமெரிக்க அதிபர் ரீகன், சோவியத் அணுசக்தி பாலிஸ்டிக் ஏவுகணைகளைத் தகர்க்க செயற்கைக்கோள்களின் தொகுப்பை உருவாக்க வேண்டும் என்று கூறிய போது, அமெரிக்காவின் அதிபர் கனவுலகில் இருந்து பேசுகிறார் என்று ஏளனம் செய்யப்பட்டது.

கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா, ரீகனின் யோசனையை ஏற்றுக்கொண்டுள்ளது. கடந்த ஏப்ரலில், அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் ஸ்பிரிங்ஸ் நகரில், சர்வதேச விண்வெளித் துறை மாநாடு நடைபெற்றது.

இதில் சிறப்புரையாற்றிய அமெரிக்க விண்வெளிப் படைத் தளபதி ஜெனரல் ஸ்டீபன் வைட்டிங், இதுவரை எந்தப் போரும் விண்வெளியில் நடக்கவில்லை என்றும், இனி எல்லா போர்களும் விண்வெளியில் நடக்கப்போகிறது என்றும் குறிப்பிட்டார்.

ஏற்கெனவே, விண்வெளியில் அமெரிக்காவின் செயற்கைக்கோள்கள் சுற்றுப்பாதைகள், அரிக்கப்பட்டு வருவதாக அமெரிக்கத் தேசிய கட்டளை ஆணையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, 2019-ல் அமெரிக்க விண்வெளிப் படை உருவாக்கப்பட்டது. “விண்வெளியில் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்துவதே இந்தப் படையின் நோக்கம்.”

விண்வெளித்துறையில் பெரிய சக்தியாக இருக்கும் அமெரிக்காவிடம் சுமார் 9,530 செயற்கைக்கோள்கள் உள்ளன. அடுத்ததாக ரஷ்யாவிடம் 1,545 செயற்கைக்கோள்கள் உள்ளன. 900க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களுடன் சீனா மூன்றாவது இடத்தில் உள்ளது. ஜப்பான் 205 செயற்கைக்கோள்களை வைத்துள்ளது. இந்தியா 100க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை வைத்துள்ளது. பாகிஸ்தான் 8 செயற்கைக்கோள்களையே வைத்துள்ளது.

அமெரிக்கா விண்வெளியில் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுப்பதில் மும்முரமாக இருக்கும் ரஷ்யாவும், சீனாவும், விண்வெளியில் செயற்கைக்கோள்களை அழிக்கக்கூடிய ஆயுதங்களை வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது. கடந்த ஆண்டு, அண்டை நாட்டிலிருந்து வந்த விண்கலம், பூமியை மேப்பிங் செய்து கண்காணிக்கும் இராணுவ பயன்பாடுகளைக் கொண்ட இந்தியச் செயற்கைக்கோளுக்கு அருகில் 1 கிலோமீட்டர் தூரத்துக்குள் வந்து சென்றது. இந்திய செயற்கைக்கோளுடன் மோதவில்லை என்றாலும், இந்த சம்பவம் ஒரு எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

இந்தச் சூழலில், தாக்குதல்களிலிருந்து செயற்கைக்கோள்களைப் பாதுகாக்கும் திறனை இந்தியாவும் மேம்படுத்தும் விதமாக, ‘Bodyguard’ செயற்கைக்கோள்களை உருவாக்கியுள்ளது. இந்த மெய்க்காப்பாளர் செயற்கைக்கோள்கள் சீன விண்வெளிப் படைகளின் விண்வெளித் தாக்குதல்களுக்கு எதிராக பாதுகாக்கச் சுற்றுப்பாதையில் உள்ள இந்திய செயற்கைக்கோள்களுடன் இணைந்து பயன்படுத்தப்படும் கூட்டு சுற்றுப்பாதை செயற்கைக்கோள்களாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதற்காக, சுமார் 50 கண்காணிப்பு செயற்கைக்கோள்களைத் தயாரிக்க 3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் செயற்கைக்கோள்-பாதுகாப்பு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த தொடங்கியுள்ளது. இதில் முதலாவது ‘Bodyguard Satellite’ அடுத்த ஆண்டு விண்ணில் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், விண்வெளி அச்சுறுத்தல்களை விரைவாக அடையாளம் காண ஒளி கண்டறிதல் மற்றும் வரம்பு (LiDAR) செயற்கைக்கோள்களை ஏவுவதும் இந்தத் திட்டத்தின் நோக்கம்.

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில், பூமி கண்காணிப்பு மற்றும் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் மூலம் சுமார் 400க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் 24 மணி நேரமும் உழைத்ததாக இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்தார். ஏற்கெனவே நாட்டின் சுமார் 7,000 கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரை மற்றும் வடக்கு எல்லைகளைப் பாதுகாப்பதில் சுமார் 10 இந்திய செயற்கைக்கோள்கள் 24 மணி நேரமும் இயங்கி வருகின்றன.

மற்ற நாடுகளின் உளவு செயற்கைக்கோள்களைக் கண்காணிக்க தனி செயற்கைக்கோள் கூட்டமைப்பை (NETRA – Network for Tracking Space Objects and Analysis) திட்டத்தின் கீழ் உருவாக்கி வருகிறது. உலகளாவிய விண்வெளி சக்தியாக உருவெடுத்துள்ள இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகளுக்கு இணையாக செயற்கைக்கோள் எதிர்ப்பு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ உள்ளது.

Facebook Comments Box