“அனைவருக்கும் என் நன்றி” – 2 ஆண்டுகளுக்குப் பிறகு சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த ஆசம் கான்

சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ஆசம் கான், இரண்டு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த பிறகு இன்று ஜாமீனில் விடுதலையாகியுள்ளார். வெளியே வந்த அவர், “அனைவருக்கும் நன்றி. என்னை ஆதரித்த அனைவருக்கும் என் ஆசீர்வாதங்கள்” எனத் தெரிவித்தார்.

பல வழக்குகள் நிலுவையில் இருந்ததால் ஆசம் கான் கைது செய்யப்பட்டார். ஒவ்வொரு வழக்கிலும் ஜாமீன் பெற்று வந்த அவர், இறுதியாக குவாலிட்டி பார் நில ஆக்கிரமிப்பு வழக்கிலும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றார். இதனைத் தொடர்ந்து சீதாபூர் சிறையிலிருந்து இன்று விடுவிக்கப்பட்டார்.

சிறையிலிருந்து வெளிவந்த ஆசம் கானை, சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் சிவபால் யாதவ் வரவேற்றார். ஊடகவியலாளர்களிடம் பேசிய ஆசம் கான், “நான் சிறையில் யாரையும் சந்திக்கவில்லை. தொலைபேசிப் பயன்படுத்த அனுமதி இல்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே உலகத்திலிருந்து துண்டிக்கப்பட்டிருந்தேன். எனவே, நான் வேறு கட்சியில் சேர்வேன் என்ற செய்திகளுக்கு விளக்கம் அளிக்க முடியாது. அதை பரப்பியவர்களே விளக்க வேண்டும்” என்றார்.

இதற்கிடையில், ஆசம் கான் விடுதலையானதற்கு சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் வரவேற்பு தெரிவித்தார். மேலும், “உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஆசம் கான் மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்துப் பொய்வழக்குகளும் வாபஸ் பெறப்படும்” என அவர் உறுதியளித்தார்.

Facebook Comments Box