மீண்டும் வரலாற்று உச்சம்: தங்கம் ரூ.84,000 எட்டியது!
தங்க விலையில் இதுவரை இல்லாத புதிய உச்சம் பதிவாகியுள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.84 ஆயிரத்தை எட்டியுள்ளது.
சர்வதேச பொருளாதார நிலைமை மற்றும் அமெரிக்க டாலருடன் ஒப்பிடும் போது இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவை தங்க விலைக்கு காரணமாகின்றன. அதன் அடிப்படையில், கடந்த மாதம் 26-ஆம் தேதி முதல் தங்க விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
செப்டம்பர் 20-ஆம் தேதி தங்க விலை ரூ.82,320 ஆக உயர்ந்து, புதிய உச்சத்தை எட்டியது. அப்போது தங்கம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, நேற்று சென்னை சந்தையில் ஆபரணத் தங்க விலை ரூ.83 ஆயிரத்தைக் கடந்தது. பவுனுக்கு ரூ.1,120 உயர்ந்து, ரூ.83,440-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இன்று (செப்.23) காலை 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.70 உயர்ந்து, ரூ.10,500 ஆகவும், பவுனுக்கு ரூ.560 உயர்ந்து, ரூ.84,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் ஏற்றமடைந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.149 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,000 உயர்ந்து ரூ.1,49,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
“அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தை குறைத்ததன் விளைவாக, முதலீட்டாளர்கள் வங்கியில் இருந்து தங்க முதலீட்டிற்கு மாறியுள்ளனர். மேலும், இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி மற்றும் புவிசார் அரசியல் குழப்பங்கள் காரணமாக தங்கத்தில் முதலீடு அதிகரித்துள்ளது. இதனால் விலை உயரும் நிலை உருவாகியுள்ளது. வருகிற நாட்களில் தங்க விலை மேலும் உயரும் வாய்ப்பு உள்ளது” என்று வர்த்தக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.