சினிமா டிக்கெட் விலையை ரூ.200 என நிர்ணயித்த கர்நாடக அரசின் அறிவிப்புக்கு ஐகோர்ட் இடைக்கால தடை

கர்நாடக மாநில அரசு அனைத்து திரையரங்குகள் மற்றும் மல்டிபிளெக்ஸ்களில் சினிமா டிக்கெட் விலையை ரூ.200 என நிர்ணயித்திருந்த புதிய அறிவிப்புக்கு, கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

சினிமா கட்டண உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில், கர்நாடக அரசு சமீபத்தில் கர்நாடக சினிமா சட்டம், 1964-ல் திருத்தம் செய்தது. அதன் படி, ஜிஎஸ்டி தவிர்த்து, சினிமா டிக்கெட் விலை அதிகபட்சம் ரூ.200 ஆக நிர்ணயிக்கப்பட்டது. அனைத்து திரையரங்குகள், மல்டிபிளெக்ஸ் தியேட்டர்கள் இதற்குள் வருவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், 75-க்கும் குறைவான இருக்கைகள் கொண்ட பிரீமியம் வசதியுள்ள திரையரங்குகள் மட்டும் விலக்கு அளிக்கப்பட்டன.

இந்த திருத்தத்தை எதிர்த்து இந்திய மல்டிபிளெக்ஸ் சங்கம், ஹோம்பலே பிலிம்ஸ், கீஸ்டோன் என்டர்டெயின்மென்ட், வி.கே. பிலிம்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. மனுக்களில், “கர்நாடக சினிமா சட்டம் 1964 என்பது தியேட்டர்களின் உரிமங்களை கட்டுப்படுத்துவதற்கான சட்டம்தான்; சினிமா டிக்கெட் விலையை நிர்ணயிப்பதற்கு அல்ல. எனவே, அரசின் இந்த திருத்தம் செல்லத்தக்கதல்ல” என்று வாதிடப்பட்டது.

மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி ரவி வி. ஹோஸ்மானி, அரசின் இந்த அறிவிப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

Facebook Comments Box