“5 ஆண்டுகளாக குடும்பத்தை கவனிக்கவில்லை” – ரிஷப் ஷெட்டி உருக்கம்

‘காந்தாரா சாப்டர் 1’ படத்துக்காக கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் குடும்பத்தையும் குழந்தைகளையும் கவனிக்கவில்லை என்று ரிஷப் ஷெட்டி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரிஷப் ஷெட்டி பேசியதாவது: “படத்தின் சில காட்சிகள் மிகவும் ஆபத்தானவையாக இருந்தன. அந்த நாட்களில், நான் வேண்டுமென்றே என் மனைவி பிரகதியை படப்பிடிப்பு தளத்திற்கு தாமதமாக வரச் சொல்லி ஏமாற்றுவேன். கிட்டத்தட்ட 3,4 முறை மரணத்தின் அருகே சென்றுவந்தேன். தெய்வத்தின் உதவியால் மட்டுமே இன்று உங்கள் முன்னால் நின்றுகொண்டிருக்கிறேன். கடந்த மூன்று மாதங்களாக, நான் சரியாக தூங்கவில்லை. இந்த படத்துக்காக இடைவிடாமல் உழைத்து வருகிறேன்.

ஒவ்வொரு நடிகரும், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் குழு உறுப்பினர்களும் இன்று நீங்கள் ட்ரெய்லரில் பார்க்கும் விஷயங்களுக்காக பங்களித்துள்ளனர். நாங்கள் பல சவால்களை எதிர்கொண்டோம். ஆனால் நம்பிக்கை, கடின உழைப்பு மற்றும் தெய்வீக ஆதரவு எங்களைத் தொடர்ந்து வழிநடத்தியது. இந்த படத்தில் உண்மை எது, கற்பனை எது என்பதை நீங்கள் அளவிட முடியாது. அதுதான் இந்த சினிமாவை வடிவமைத்தது. இந்த டிரெய்லர் வெறும் ஒரு துணுக்கு மட்டுமே. முழு அனுபவமும் திரையரங்குகளில் காத்திருக்கிறது.

காந்தாரா படம் எனக்கு 5 வருடங்களாக ஒரு உணர்வுப்பூர்வமான பயணமாக இருந்து வருகிறது. முதல் பாகத்தில் 2 வருடங்களும், இந்த படத்தில் 3 வருடங்களும் பணியாற்றினேன். இந்த 5 வருடங்களில், என் குடும்பத்தையும் குழந்தைகளையும் சரியாகக் கவனிக்க முடியவில்லை. இப்போது எனக்கு இருக்கும் ஒரே உணர்வு சினிமாவை நிறைவு செய்யும் உணர்வுதான்” இவ்வாறு ரிஷப் ஷெட்டி தெரிவித்தார்.

Facebook Comments Box