ஹாங்காங் சூப்பர் சிக்ஸ்: தினேஷ் கார்த்திக் கேப்டனாக நியமனம்
ஹாங் காங் சூப்பர் சிக்ஸ் கிரிக்கெட் தொடர் வரும் நவம்பர் 7-ம் தேதி ஹாங் காங்கில் தொடங்குகிறது. இதில் இந்தியா சார்பில் பங்கேற்கும் அணிக்கு முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக தினேஷ் கார்த்திக் கூறும்போது, “ஹாங் காங் சூப்பர் சிக்ஸ் தொடரில் இந்திய அணியை வழிநடத்துவது பெருமையான விஷயம். இது உலகளாவிய அங்கீகாரத்தைக் கொண்ட ஒரு தொடராகும். நம்பமுடியாத அளவிலான சாதனைகளை படைத்த வீரர்கள் அடங்கிய அணியை வழிநடத்த நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். அச்சமற்ற மற்றும் பொழுதுபோக்கு நிறைந்த கிரிக்கெட்டை விளையாடுவதே எங்களது நோக்கமாக இருக்கும்” என்றார்.
அக்.25-ம் தேதி சூப்பர் கோப்பை தொடக்கம்: சூப்பர் கோப்பை கால்பந்து தொடர் வரும் அக்டோபர் 25-ம் தேதி கோவாவில் தொடங்கும் என அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு நேற்று அறிவித்தது.
ஒடிசா எஃப்சி தவிர ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் விளையாடும் அனைத்து கிளப்புகளும் சூப்பர் கோப்பை தொடரில் பங்கேற்க சம்மதம் தெரிவித்துள்ளன. ஐஎஸ்எல் கிளப்புகளுடன் இன்டர் காஷி, ரியல் காஷ்மீர், கோகுலம் கேரளா எஃப்சி மற்றும் ராஜஸ்தான் யுனைடெட் ஆகிய நான்கு ஐ-லீக் அணிகளும் இணைந்து சூப்பர் கோப்பை தொடரில் விளையாடும்.
இந்த தொடருக்கான போட்டி அட்டவணை நாளை வெளியிடப்படுகிறது. வழக்கமாக இந்த தொடர் ஒவ்வொரு ஆண்டும் சீசனின் இறுதியில் நடத்தப்படும். ஆனால் இம்முறை சீசனில் தொடக்கத்தில் நடத்தப்படுகிறது. சூப்பர் கோப்பையை வெல்லும் அணிக்கு வரும் 2026-27 சீசனுக்கான ஏஎஃப்சி சாம்பியன்ஸ் லீக் 2 பிளே-ஆஃப் தொடரில் இடம் வழங்கப்படும் என்று இந்திய கால்பந்து கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ஸ்மிருதி மந்தனா முதலிடத்தில் நீடிப்பு: சர்வதேச மகளிர் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் பேட்டிங்கில் இந்தியாவின் தொடக்க வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா 818 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறார். சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் மந்தனா 2 சதங்கள் விளாசியிருந்தார். ஆஸ்திரேலியாவின் பெத் மூனி 2 இடங்கள் முன்னேறி 727 புள்ளிகளுடன் 3-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். பந்துவீச்சில் இந்தியாவின் தீப்தி சர்மா 651 புள்ளிகளுடன் 2 இடங்கள் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார்.
அர்ஜெண்டினா – ஆஸி. நவ.12-ல் மோதல்: நட்சத்திர வீரரான லயோனல் மெஸ்ஸியை உள்ளடக்கிய அர்ஜெண்டினா கால்பந்து அணி வரும் நவம்பர் மாதம் கேரளாவுக்கு வருகை தந்து நட்புரீதியிலான சர்வதேச போட்டியில் விளையாட உள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் அர்ஜெண்டினா அணி ஆஸ்திரேலியாவுடன் மோதக்கூடும் எனவும் இந்த ஆட்டம் நவம்பர் 12 முதல் 18-ம் தேதிக்குள் கொச்சியில் நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.