ராமேசுவரம் – காசி ஆன்மிகப் பயணத்துக்கு விண்ணப்பிக்கலாம்: இந்து அறநிலையத் துறை அறிவிப்பு

ராமேசுவரம் – காசி ஆன்மிகப் பயணத்துக்காக மொத்தம் 600 பக்தர்களை அழைத்துச் செல்லும் திட்டத்தை இந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளது. இப்பயணத்துக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் அக்டோபர் 22 என அறிவிக்கப்பட்டுள்ளது.

2022–23ஆம் ஆண்டிற்கான மானிய அறிவிப்பின் அடிப்படையில், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலிலிருந்து காசி விஸ்வநாதர் கோயில்வரை தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் அரசு செலவில் ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லப்படுவார்கள் எனத் திட்டமிடப்பட்டது. அதன்படி, 2022–23இல் 200 பேர், 2023–24இல் 300 பேர், 2024–25இல் 420 பேர் ராமேசுவரத்திலிருந்து காசிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இப்போது 2025–26ஆம் ஆண்டிற்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தைச் சேர்ந்த 600 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். இந்து சமய அறநிலையத் துறையின் 20 இணை ஆணையர் மண்டலங்களிலிருந்து தலா 30 பேர் வீதம் தேர்வு செய்யப்படும்.

விண்ணப்பதாரர்:

  • இந்து மதத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்
  • இறைநம்பிக்கை கொண்டவராக இருக்க வேண்டும்
  • வயது 60 முதல் 70க்குள் இருக்க வேண்டும்
  • ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்தை மீறக்கூடாது

விண்ணப்பப் படிவங்கள் சம்பந்தப்பட்ட இணை ஆணையர் அலுவலகங்களில் கிடைக்கும். மேலும் www.hrce.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, தேவையான ஆவணங்களுடன், அக்டோபர் 22க்குள் சம்பந்தப்பட்ட இணை ஆணையர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

ராமேசுவரம் ராமநாதசுவாமி தரிசனத்துடன் துவங்கும் இந்த ஆன்மிகப் பயணம், காசி விஸ்வநாதர் தரிசனம் செய்து முடித்த பின் மீண்டும் ராமேசுவரத்தில் ராமநாதசுவாமி தரிசனத்துடன் நிறைவடையும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Facebook Comments Box